வெளி நாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக கார்களை இறக்குமதி செய்த வழக்கில், நடிகர் துல்கர் சல்மான் சிக்கலில் மாட்டியுள்ளார். கார்களை இறக்குமதி செய்த விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அந்நிய மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ரெய்டு, தொடர்கிறது. ’லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தில், அதிகாரிகள் கண்ணில் மண்ணை தூவி, சட்ட விரோதமாக கார்களை கடத்திய நடிகர் துல்கர் சல்மான், நிஜத்தில் நினைத்தது போன்று நடக்காததால் அமலாக்கத்துறை வசம் சிக்கிக் கொண்டு திண்டாடி வருகிறார். பூடானில் இருந்து சொகுசு கார்களை சட்ட விரோதமாக இறக்குமதி செய்ததாக எழுந்த புகாரில், கடந்த மாதம் நாடு முழுவதும் ’ஆப்ரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் சோதனை நடத்தியது சுங்கத்துறை.இந்த சோதனையில் பிரபல நடிகர்களான துல்கர் சல்மான், பிரித்விராஜ் ஆகிய இருவரும் சிக்கியது மலையாள சினிமாவில் பெரும் பரபரப்பை கிளப்பியது. குறிப்பாக, துல்கர் சல்மானின் வீட்டை சல்லடை போட்டு அலசி ஆராய்ந்த சுங்கத்துறை, அவரிடம் இருந்த லேண்ட் ரோவர், டிபென்டர் ரக விண்டேஜ் கார்களை பறிமுதல் செய்தது.’லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தில் பயன்படுத்திய டாடா நிசான் பேட்ரோல் காரையும் கடந்த செவ்வாய்கிழமை கைப்பற்றி அதிரடி காட்டியது. இந்நிலையில் தான், பூடானில் இருந்து கார்களை இறக்குமதி செய்ததில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற புகாரில் வழக்கை கையிலெடுத்தது, அமலாக்கத்துறை. அதாவது, கோவையில் இருந்து செயல்படும் இந்த நெட்வொர்க் இந்திய ராணுவம், அமெரிக்க தூதரகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் பெயரில், போலி ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. எல்லை தாண்டி எடுத்து வரப்படும் கார்கள், அருணாச்சல பிரதேசம், இமாச்சல் போன்ற மாநிலங்களில் மோசடியாக பதிவு செய்யப்பட்டு, அங்கிருந்து குறைந்த விலைக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வாறு வாங்கும் கார்களுக்கு ஹவாலா மூலமாக பணம் செலுத்தப்படுவதால், அந்நிய செலவாணி சட்டத்தை மீறி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனடிப்படையில், களத்தில் இறங்கிய அமலாக்கத்துறை கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, சென்னை என கேரளா மற்றும் தமிழகத்தில் மொத்தமாக 17 இடங்களில் ரெய்டு நடத்தி வருகிறது. சென்னையில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள துல்கருக்கு சொந்தமான ரெஸ்ட்ரோ மோட்டார்ஸ் ஆட்டோ மோட்டிவ் மற்றும் பட தயாரிப்பு அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. சோதனை முடிவிலே, எத்தனை கார்கள் முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்டன? சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததா? கார்களை வாங்க உடந்தையாக இருந்த புரோக்கர்கள் யார்? என்பதெல்லாம் தெரிய வரும். திரைப்படங்களுக்கு கோடி கோடியாக சம்பளம் வாங்கும் போதும், குறைந்த விலையில் கார்களை வாங்க ஆசைப்பட்டு, தற்போது சுங்கத்துறை, அமலாக்கத்துறை என விசாரணை அமைப்புகள் அடுத்தடுத்து வீட்டின் கதவை தட்டும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறார் லக்கி பாஸ்கர்.