கல்லீரல் பாதித்து உடல் நலம் குன்றி கவலைக்கிடமாக இருந்த, "துள்ளுவதோ இளமை" பட நடிகர் அபிநய், உயிரிழந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியது. அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆதரவற்று இருந்த நடிகர் அபிநய், கவனிக்க கூட ஆள் இன்றி படுக்கையிலேயே இறந்து கிடந்தது கண்கலங்கச் செய்தது.திரையுலகில் அறிமுகமாகும் போது HANDSOME ஹீரோவாக இருந்த நடிகர் அபிநய், தனது இறுதி நொடியில் உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக இருந்த காட்சிகள் யாருக்காக இருந்தாலும் ரணத்தை தான் ஏற்படுத்தும்.கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷின் அறிமுக படமான துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் நடிகர் அபிநய். ஹீரோவாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையில் திரைத் துறைக்கு வந்த அபிநயிக்கு, ஆரம்பத்தில் துணை கதா பாத்திரங்கள் தான் கிடைத்தது. ஆனாலும் துவண்டு போகாத அபிநய், ஜங்க்ஷன், சக்ஸஸ், தாஸ், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்தார்.தமிழ் மட்டுமின்றி மலையாள படங்களிலும் கூட அபிநய் கால் தடம் பதித்திருந்தார்.மலையாளத்தில் பழம்பெரும் நடிகையாக இருந்து தமிழ் சினிமாவிலும் சில படங்கள் நடித்திருக்கும் டி.ஆர்.ராதாமணியின் மகன் தான் அபிநய் என்ற நிலையில், சினிமா வாய்ப்பு குறைய தொடங்கியதும் சில வருடங்கள் துபாய்க்கு சென்று வேலை செய்து வந்தார்.ஆனால், பிடித்த வேலை சினிமா தான் என்பதால் துபாயில் இருக்க முடியாமல் சென்னைக்கு திரும்பிய அபிநய், சிங்கார சென்னை என்ற படத்தில் நடித்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அபிநய் நடித்த அந்த படம் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், விளம்பர படங்களில் கூட நடிக்க துவங்கினார். நடிப்பதோடு நின்று விடாமல் டப்பிங்கிலும் களமிறங்கிய அபிநய், பிரபல பாலிவுட் வில்லன் நடிகரான வித்யுத் ஜம்வாலுக்கு, தமிழ் டப்பிங் பேசி வந்தார். 2019ஆம் ஆண்டு தனது தாயார் டி.ஆர்.ராதாமணியின் மறைவுக்கு பிறகு பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளான அபிநய், ஆதரவுக்கு யாரும் இல்லாமல் தனியாகவே வசித்து வந்தார்.இதனிடையே, கல்லீரல் பாதிப்புக்கு ஆளான அபிநய், பாதிப்பு தீவிரமாகி, மிகவும் உடல் நலம் பாதித்து இருந்தார். கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த அபிநய், நோயின் தீவிரம் காரணமாக மெலிந்த தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.HANDSOME ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட அபிநய், உடல் மெலிந்து சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் இருந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அபிநயி-யுடன் இணைந்து நடித்த தனுஷ் உள்ளிட்ட பலரும் அவருக்கு சிகிச்சைக்கு பண உதவி செய்தனர். நடிகர் பாலா கூட அபிநயி-யை நேரில் சந்தித்து பண உதவி செய்தார். ஒரு பக்கம் சக நடிகர்களிடம் இருந்து உதவிகள் வந்தாலும், சிகிச்சைக்கான செலவுகளுக்கே அது சரியாக இருந்தது. நோயின் தீவிரம் காரணமாக உடலில் ஊசி படாத இடமே இல்லை என்று அபிநய் பேட்டிகளில் கூறியது கூட பரிதாபத்தை ஏற்படுத்தியது.வெளியில் எல்லாருக்கும் பார்க்க அபிநய் உடல் நலம் தேறி வந்தது போல தெரிந்தாலும், உள்ளுக்குள் கல்லீரல் பாதிப்பு சிறுக சிறுகஉயிரை பறித்துக் கொண்டிருந்தது.இந்நிலையில், வழக்கம் போல இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்க சென்ற நடிகர் அபிநய், காலையில் எழுந்திருக்கவே இல்லை. படுக்கையிலேயேஅபிநயின் உயிர் பிரிந்தது. அபிநய் இறந்த பின்னரும் கூட அவருக்காக உறவினர்கள் யாருமே முன்னாடி வந்து நிற்க வில்லை என்பது சோகத்தின் உச்சமாக உள்ளது. இறுதி சடங்குகளைசெய்வதற்கு கூட உறவினர்கள் வந்து நிற்காத நிலையில், சில திரைத்துறை நண்பர்களே ஒன்றுசேர்ந்து இறுதி சடங்குகளை செய்து அபிநயை வழியனுப்பி வைத்தனர்.நல்ல நடிகராக வந்திருக்க வேண்டியவர் 44 வயதிலேயே வறுமையின் பிடியிலும், பிணியிலும் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது, திரைத் துறையினரிடமும் ரசிகர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.