ஐந்து ஆண்டுகளாக வேலை இல்லை, வறுமை, மாநில அந்தஸ்து உரிமையும் இல்லை. இனி எதற்காக காத்திருக்க வேண்டும் என போராட்டத்தில் குதித்த Gen Z இளைஞர்கள்... சூறையாடப்பட்ட பாஜக அலுவலகம், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் துப்பாக்கிச்சூடு நடத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என லடாக்கை உலுக்கிய போராட்டத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.ஆட்சிக்கு வந்ததில் இருந்தே காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, சிஏஏ சட்டம் என சர்ச்சையான திருத்தங்களை செயல்படுத்திய பாஜக அரசு, 2019, அக்டோபர் 31ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் மறுசீரமைப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இதனால், அதுவரை ஜம்மு காஷ்மீரில் இருந்த லடாக், தனியாக பிரிக்கப்பட்டு, தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது.லடாக் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு, 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அங்கு வசிக்கும் மக்கள், தங்கள் பகுதிக்கு மாநில அந்தஸ்து, நிலம், கலாச்சாரம் மற்றும் வளங்களை பாதுகாக்கும் விதமாக, அரசியல் சாசன பாதுகாப்பும் கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தில், 6ஆவது அட்டவணையில் லடாக்கை சேர்க்கும்படி அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தங்களுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் வேலையில்லா திண்டாட்டம், வறுமை அதிகரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு சமூக ஆர்வலரும், பருவநிலை செயற்பாட்டாளருமான சோனம் வாங்சுக் 2 வாரங்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். Leh Apex Body அமைப்பில் உறுப்பினராக இருக்கும் சோனம் வாங்சுக்-ன் உண்ணாவிரத போராட்டம், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தது. லே பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் சுமார் 2000 இளைஞர்கள் பங்கேற்றனர். அப்போது பொங்கி எழுந்த இளைஞர்களின் போராட்டம் வன்முறையானது. வாகனங்கள் நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. பாதுகாப்பு படையினர் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்களை கண்ணீர் குண்டு வீசி தாக்க முயன்றும் அது முடியாமல் போனது. இந்த கலவரத்தில் போலீசார் 50க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதற்கிடையே போராட்டக்காரர்களிடம் பேசிய சோனம், ”உங்களின் கோபம் நியாயமானது. இது Gen Z தலைமுறையின் புரட்சி. ஆனால், வன்முறை நமக்கு தீர்வாகாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த கலவரத்தில் இரு தரப்பிலும் சேதம் ஏற்பட்ட நிலையில், லடாக் சிறப்பு அந்தஸ்து குறித்து வரும் 6ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. சமீபத்தில், நேபாளத்தில் வெடித்த Gen Z தலைமுறையினரின் போராட்டம், உலக நாடுகளை அதிர வைத்தது. ஊழல் குற்றச்சாட்டு, சமூக ஊடகங்கள் மீதான தடை உள்ளிட்டவற்றை கண்டித்து, பொங்கி எழுந்த Gen Z இளைஞர்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சி மாற்றத்தையே கொண்டு வந்தனர். பெரு, நேபாளம் போன்ற நாடுகளில் வெடித்த Gen Z தலைமுறையினரின் போராட்டம் அரசை ஆட்டம் காண வைத்தது. இதேபோல் லடாக்கிலும் போராட்டம் வெடித்ததால் மத்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.