ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள போலீசார் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனையும் 2-வது குற்றவாளியாக சம்போ செந்திலையும் சேர்த்துள்ளனர். இதில் ரவுடி சம்போ செந்திலுக்கும், ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை இருந்தது என்பதுகுறித்து காவல்துறை குற்றப்பத்திரிகையில் தெளிவுபடுத்தி உள்ளனர்..பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த ஜூலை மாதம் 5 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அரசியல் புள்ளிகள் முதல் வழக்கறிஞர்கள் வரை 28 பேருக்கு கையில் விலங்கு மாட்டப்பட்ட நிலையில் தப்பி ஓட முயன்ற திருவேங்கடமும், போலீசாருக்கு தண்ணி காட்டிய சீசிங் ராஜாவும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக காக்கிச்சட்டைகளின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சம்பவம் செந்தில் என்ற சம்போ செந்தில் மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.இதுஒருபுறமிருக்க, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றபத்திரிகையை செம்பியம் போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 30 பேரும் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், 2-வது குற்றவாளியாக சம்போ செந்திலும் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் முன்பகையே கொலைக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான ரவுடி கும்பல்களுக்கு ஆம்ஸ்ட்ராங்குடன் ஒவ்வொரு விதமான முன் பகை இருந்துள்ளதாக குற்றபத்திரிகையில் குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதையும் தெளிவாக தெரிவித்துள்ளனர். சென்னை ராயபுரத்தில் வசித்து வந்த சம்போ செந்திலின் தந்தை கடந்த 2002 ஆம் ஆண்டு தலைமை செயலக காலனி குடியிருப்பு பகுதியில் நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்திற்கு அருகே உள்ள இடத்தையும் சேர்த்து சம்போ செந்திலின் தந்தை ஆக்கிரமித்ததாக கூறி ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையடுத்து தனது தந்தைக்காக கட்டப்பஞ்சாயத்து பேச சென்ற சம்போ செந்திலிடம் ரூபாய் 30 லட்சம் கொடுத்தால் இடத்தை காலி செய்கிறோம் இல்லாவிட்டால் ஒரு அடிகூட நகரமாட்டோம் என ஆம்ஸ்ட்ராங்க ஆதரவாளர்கள் கறார் மிரட்டல் விடுத்துள்ளனர்..சொன்னதுபோலவே இடத்தைவிட்டு நகராமல் குடைச்சல் கொடுக்க, பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஆம்ஸ்ட்ராங்க் ஆதரவாளர்களுக்கு சம்போ செந்தில் 12 லட்சத்தை கொடுத்து பஞ்சாயத்தை முடித்துள்ளார். என்னதான் பணத்தை கொடுத்து பஞ்சாயத்தை தற்காலிகமாக முடித்து கொண்டாலும் பகை என்னவோ படு ஸ்ட்ராங்கானது. இருதரப்பினருக்கும் முட்டலும் மோதலுமாக நாட்கள் நகர்ந்தது. இதை மனதில் வைத்துக் கொண்டே இருந்த சம்போ செந்தில் ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக்கட்ட தனது சொந்த பணமான 4 லட்சத்தை செலவழித்ததோடு நண்பர்களிடமும் கணக்கு வழக்கில்லாமல் பணத்தை வாங்கி வாரி இறைத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ளனர்..