திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திமுக பூத் ஏஜெண்டுகள் எதிர்க்கட்சியினரின் வாக்குகளை பறிக்கும் வகையில் நடந்து கொள்வதாக அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.பெரும் குழப்பங்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், வாக்குச்சாவடி அலுவலர்களுடன் சேர்ந்து BLA எனப்படும் அரசியல் கட்சிகளை சேர்ந்த முகவர்களும் SIR படிவங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் SIR படிவங்கள் கொடுத்து விநியோகம் செய்யப்படுவதற்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவை சேர்ந்த முகவர்கள், மொத்த படிவங்களையும் பெற்றுக் கொண்டு, வீடு வீடாக சென்று வழங்காமல், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, திமுகவை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே படிவத்தை விநியோகிப்பதாக குற்றம் சாட்டும் அதிமுக, மற்றவர்களின் படிவங்களை கிழித்து போடுவதாகவும், தாங்களே அதனை தவறாக நிரப்பி, எதிர்ப்பு வாக்குகளை நீக்க முயற்சிப்பதாக கூறி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு SIR படிவங்களை ஆளும் கட்சியினர் தர மறுப்பதாக சாடியுள்ளார். தவெகவினரின் வாக்குகளை குறிவைத்து படிவங்கள் விநியோகப்படாமல் இருப்பதற்கு பின்னணியில் திமுகவே இருப்பதாக விஜய் புகார் தெரிவித்துள்ளார். அதே போல, வாக்குச்சாவடி அலுவலர்களை எதிர்க்கட்சியினரின் வீடுகளுக்கு செல்ல விடாமல் திமுகவினர் தடுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் அடுக்கடுக்கான புகார்களை கூறுகின்றன.என்னதான் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை திமுக கடுமையாக எதிர்த்தாலும், களத்தில் என்னமோ திமுக தான் இறங்கி வேலை செய்துகொண்டிருக்கிறது என்கின்றனர் எதிர்க்கட்சியினர். S.I.R படிவங்களை நிரப்புவது தொடர்பாக, மக்களுக்கு எழும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக திமுக தலைமை அலுவலகத்திலேயே வார் ரூம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு, மாவட்ட செயலாளர்கள் நேரடியாக S.I.R, பணிகளை கண்காணித்து மக்களிடம் பேசி படிவங்களை நிரப்பி ஒப்படைக்கும் பணியிலும் இறங்கியுள்ளனர். இதுதவிர திமுக பூத் ஏஜெண்டுகளுக்கு தேவையான செல்போன் உள்ளிட்ட உதவிகளை மட்டுமல்லாமல், ஒரு மாத ஊதியத்தையே அவர்கள் நிர்ணயித்து வழங்கி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.நிலைமை இப்படி இருக்கையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை பகிரங்கமாக மறுத்திருக்கும் திமுக, தேர்தல் ஆணையம் கொடுத்த உரிமையை தான் திமுக பயன்படுத்துகிறது என விளக்கமளித்துள்ளது. படிவத்தை பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கு பூர்த்தி செய்து கொடுப்பதில் என்ன தவறு? என கேள்வி எழுப்பும் திமுக, திமுகவினர் வாக்குகள் பறிக்கப்பட்டுவிட கூடாது என களத்தில் பணியாற்றுவதாக விளக்கமளித்துள்ளது.தேர்தல் ஆணையம் மற்ற கட்சிகளுக்கும் பூத் அளவிலான அதிகாரியுடன் செல்ல அனுமதி வழங்கியுள்ள நிலையில், அவர்களும் செல்லலாமே என வினவும் திமுக, எந்த காரணத்தை கொண்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட கூடாது என உழைப்பதாக தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சியான அதிமுக, ஆளும் கட்சி மீதான புகாரை முன் வைப்பதிலேயே தீவிரம் காட்டும் நிலையில், களத்தில் பணியாற்றாமல் கோட்டை விடுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் புகார் குறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் தினமும் 50 படிவங்களை பெற்று வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நிரப்பப்பட்ட படிவங்களை பூத் மட்ட அலுவலரிடம் வழங்குவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.அரசியல் கட்சி பூத் ஏஜெண்டுகள் அளிக்கும் படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சரிபார்க்கப்பட்டு, இறுதியாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பர் என்றும் உறுதியளித்துள்ளது.இதையும் பாருங்கள் - பாட்டு பாடி மேடையை தெறிக்கவிட்ட பெண் தொண்டர் | Sir | TVKProtest | TVKUpdates