தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. நாளை அதிகாலைக்குள் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடையும் என, வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் நடுத்தர வெப்ப மண்டல நிலைகளின் மேல் காற்று சுழற்சி நிலவியது. இது, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடலில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது எனவும், இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.