கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன் கோடு அருகே உள்ள ஆசாரிவிளை கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் - லட்சுமி தம்பதியருக்கு 3 பெண் பிள்ளைகளும், 3 ஆண் பிள்ளைகள் உள்ளனர். பனையேறும் கூலிதொழிலாளியான சந்திரபோஸ் அதில் வரும் வருமானத்தை வைத்து தனது பிள்ளைகள், குடும்பத்தை கவனித்து வந்த நிலையில் , அவர்களுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பிறகு மகன்கள் மற்றும் மகள்கள் அவரவர் குடும்பத்தினருடன் செட்டில்ட் ஆன நிலையில், தாய் தந்தையரை மறந்துள்ளனர்.பிள்ளைகளையே செல்வமாய் நினைத்து வந்த வயதான இந்த தாய் தந்தையரை யார் கவனிப்பது என பெற்ற பிள்ளைகளுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய ஆதரவின்றியும் சொந்த வீட்டில் மனைவியுடன் வசித்து வந்த சந்திரபோஸ் மனதில் ஆயிரம் வலிகளை சுமந்து கொண்டிருந்தாலும் தனது உடம்பில் தெம்பு இருக்கும் வரை பனையேறும் தொழில் செய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வயது முதிர்வால் நோய்வாய்ப்பட்ட லட்சுமி படுத்த படுக்கையான நிலையில் 90 வயதான சந்திரபோஸ், தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கண்ணும் கருத்துமாக மனைவியை கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சந்திரபோஸ்க்கும் இரு கண் பார்வையும் பறி போன நிலையில் மனைவியை பராமரிக்க முடியாமல் போயுள்ளது. இதனால் படுத்த படுக்கையில் கிடந்த மூதாட்டி லட்சுமியின் உடல் மோசமான நிலையில் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டு கடும் அவதியடைந்து வந்துள்ளார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் வயதான தம்பதியர் தவித்து வந்த நிலையில் ,தாய் தந்தையரை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரிக்க முன் வராத பிள்ளைகள் ஆறு பேரும் மாதம் ஒருவர் என ஷிப்ட் முறையில் உணவு மட்டுமே வழங்கி வந்ததாக தெரிகிறது. பார்வையற்ற சந்திரபோஸ் பல ஏக்கங்களோடும், கடும் மன உளைச்சலோடும் இருந்த நிலையில் அப்போதும் மனைவியை கை விடாமல் தன்னால் இயன்றவற்றை அவருக்கு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் உடல் முழுதும் ஏற்பட்ட புண்ணால் வலி தாங்க முடியாமல் மனைவி லெட்சுமி அலறி துடித்து அழுதுள்ளார். அப்போது மனைவியின் அழு குரலைக் கேட்டு வேதனையின் உச்சத்திற்கே சென்ற சந்திரபோஸ், பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகள் தங்களை பராமரிக்க முன்வரவில்லை , இனிமேல் வாழ்ந்து என்ன பலன் என எண்ணியுள்ளார். இதனால் கண் பார்வையற்ற சந்திரபோஸ் தட்டு தடுமாறி சென்று வீட்டினுள் கிடந்த கத்தியை எடுத்து வந்து படுக்கையில் கிடந்த தனது மனைவியை கழுத்தை அறுத்து கருணை கொலை செய்துள்ளார். உணவு அறுந்தும் வேலை வந்ததும் இளைய மகன் சாந்தகுமார் தாய் தந்தையருக்கு உணவு எடுத்துக் கொண்டு சென்றபோது சந்திரபோஸ் கண்கள் கலங்கியபடி வீட்டின் முன் வாசலில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது அவர் பதில் ஏதும் பேசாததால் சந்தேகமடைந்த சாந்தகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தாய் கழுத்தறுத்தபடி இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே சம்பவம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்திரபோஸை கைது செய்த நிலையில் ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்வமாய் நினைத்து வளர்த்தப் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் மன உளைச்சலில் இருந்த முதியவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்ட சம்பவம் காண்போர் கண்களை குளமாக்கியுள்ளது.