2034 FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி, வானத்தில் நடக்கப் போகிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? ஆமாம்... எண்ணெய் வளங்கள் மட்டுமே நிறைந்துள்ள சவுதி அரேபியா தற்போது சுற்றுலாத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, பல புதிய திட்டங்களும், கட்டுமானப் பணிகளும் அந்நாட்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களை கவரும் வகையில் நியோம் (Neom) பகுதியில், உலகின் முதல் ஸ்கை ஸ்டேடியத்தை அந்நாட்டு அரசு கட்டமைத்து இருக்கிறது.கிரிக்கெட் போலவே, கால்பந்து விளையாட்டிற்கும் உலகம் முழுவதும் கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தில் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய இந்த விளையாட்டு, தற்போது உலகம் முழுவதுமே விளையாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 48 அணிகள் பங்கேற்கும் 23ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டி, அடுத்த ஆண்டு அதாவது 2026 ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.இதையடுத்து, FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் 2034ம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நடைபெறவுள்ள 15 மைதானங்களில் சவுதி அரேபியாவில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும். இதுதான் உலகத்திலேயே முதல் ஸ்கை ஸ்டேடியமாகும். இந்த ஸ்டேடியம், தரை தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட உள்ளது. மேலும், இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் 2027ல் தொடங்க இருக்கிறது. உலகக் கோப்பைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032ஆம் ஆண்டுக்குள் இதன் பணிகள் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றூலாப் பயணிகள் மற்றும் சுற்றுலா முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நியோம் ஸ்டேடியம் கட்டப்படுகிறது.