அதிமுகவை ஒருங்கிணைக்கும் குழுவில் செங்கோட்டையன் என்ற விக்கெட் காலியான நிலையில், சசிகலா மற்றும் OPS-ன் நிலை தான் கேள்விக்குறியாகியுள்ளது.சசிகலாவை நீக்க வேண்டும் என அடம் பிடித்து மீண்டும் அதிமுகவுக்குள் வந்த OPS, கடைசியில் சசிகலாவுடன் கை கோர்த்து EPS-க்கு எதிராக நின்று கைவிடப்பட்டு இருக்கும் நிலையில், ஒருங்கிணைப்பு குழுவில் ஓட்டை விழுந்தது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.அதிமுகவை ஒருங்கிணைக்கிறோம் எனக் கூறி, போருக்கு கிளம்பிய 3 பேரில் செங்கோட்டையன் சாமர்த்தியமாக கழன்று விட்ட நிலையில், சசிகலா மற்றும் OPS-ன் எதிர்காலம் தான் அதோ கதியாகியிருக்கிறது.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் நடந்த குழப்பங்களுக்கு முதல் காரணம் சசிகலா என்றால், இரண்டாவது காரணம் ஓபிஎஸ் தான். ஆனால், விசித்திரம் என்னவென்றால் தற்போது அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என முந்திக் கொண்டு நிற்பதும் இருவர் தான். என்னமோ, அதிமுக பிளவுக்கு வேறு யாரோ காரணம் போலவும், கட்சியை இணைக்க தாங்கள் தான் தலைகீழாக ஸ்டண்ட் அடித்து வருவதாகவும் சசிகலா அன் கோ காட்டிக் கொள்வது தான் வேடிக்கையின் உச்சம்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்ட ஓ.பன்னீர் செல்வத்தின் பதவிக்கு சசிகலா மூலம் ஆபத்து வர, மெரினாவில் தியானம் நடத்தி பரபரப்பை கிளப்பினார் ஓபிஎஸ். முதலமைச்சர் நாற்காலியில் அமர நினைத்த சசிகலாவுக்கு சொத்து குவிப்பு வழக்கு எண்ட் கார்டு போட்டது.இதனையடுத்து, EPS முதலமைச்சர் ஆன நிலையில், மீண்டும் அதிமுகவுக்குள் வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் முதல் நிபந்தனையே சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்க வேண்டும் என்பதாக தான் இருந்தது.கடைசியில் EPS-க்கு எதிராக திரும்பி சசிகலாவுடன் கை கோர்த்தார் OPS. இதன் காரணமாகவே தர்ம யுத்தத்தின் போது OPS-க்கு இருந்த செல்வாக்கு, போக போக கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக மாறியது.OPS-ஐ நம்பி அவர் பின் அணிவகுத்த சில எம்.எல்.ஏ.க்களும் அதிருப்தியில் இருக்க, அதிலொருவரான மனோஜ் பாண்டியன் திமுகவிலேயே ஐக்கியமாகி விட்டார். இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டு OPS பந்தாடப்பட்டு வருகிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, கட்சி கொடி மற்றும் சின்னத்தை கூட பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி... போதாக்குறைக்கு, பாஜகவும் OPS-ஐ கைவிட்டதால் கையை பிசைந்து கொண்டு நிற்கும் நிலைக்கு ஆளாகினார்.OPS வரலாறு தான் இப்படி என்றால், சசிகலாவுக்கு சொல்லவே வேண்டாம். சிறை வாசத்தில் இருந்து வெளியே வந்ததில் இருந்து தன்னை தானே பில்டப் செய்து பேச்சு தான் பேசுகிறாரே தவிர, செயலில் எதுவும் செய்தபாடில்லை. சிறையில் இருந்து வந்ததும் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, தாம் தான் அதிமுகவை காக்க அவதரித்த தாய் என சசிகலா உதிர்த்த வார்த்தைகளை வைத்து ஒரு DICTONARY-யே போடலாம்.3 வாரத்திற்கு முன்பு கூட தேவர் நினைவிடத்திற்கு வந்து விட்டு WAIT AND SEE என சவால் விட்ட சசிகலா, அதிமுகவை திருப்பி போட போவதாக சீன் போட்டதோடு சரி, அதற்கு பிறகு என்ன ஆனார் என்பதும் தெரியவில்லை. என்னமோ, பெண் அமித்ஷா போல தன்னை ஒரு அரசியல் சாணக்கியராக உணர்ந்த சசிகலா, அவ்வப்போது பிரஸ் மீட் வைத்து ஏதாவது தனக்கு தானே பில்டப் கொடுத்துக் கொள்வது உண்டு.ஆனால், அந்த பில்டப் எல்லாம் பிசுபிசுத்து தான் போனதே தவிர, சசிகலா பின்னாடி நின்று கண் அசைவிலேயே ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆன வெண்மதி அளவுக்கு கூட பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.நீண்ட நாட்களாக தூங்கிக் கொண்டிருந்த சசிகலா, ஓ.பி.எஸ். அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு, செங்கோட்டையன் வந்த பிறகு தான் கொஞ்சம் உயிர் வந்தது.ஏனென்றால், சசிகலாவும், OPS-ம் முன் வைத்த அதிமுக ஒருங்கிணைப்பு கோஷம், செங்கோட்டையன் வந்த பிறகு தான் தீவிரமாக ஒலிக்க தொடங்கியது. ஆனால், பசும்பொன் மண்ணில் OPS, TTV, சசிகலாவுடன் கை கோர்த்து நின்ற செங்கோட்டையன், அதற்கு பிறகு என்ன நினைத்தாரோ ஒருங்கிணைப்பு குழுவை ஓரம் கட்டி விட்டு ஒதுங்கிக் கொண்டார்.இதன் காரணமாக, சசிகலா, OPS-ன் எதிர்காலம் நிச்சயமில்லாத நிலையாக மாறியிருக்கிறது.எந்த சமூக வாக்குகளை வைத்து தங்களை பெரிய பிம்பமாக காட்டிக் கொண்டார்களோ, அதே செல்வாக்கை தக்க வைக்கக் கூட இருவரும் படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது.இப்படி இருக்கும் போது, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வீராவேசம் பேசும் சசிகலாவும், OPS-ம் செல்லா காசுகளாக மாறும் நாள் நீண்ட தூரம் இல்லை என்பது தான் அரசியல் நோக்கர்கள் கருத்தாக உள்ளது.