கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால், வழக்கு தொடருவேன் என்று மிரட்டிய ஆத்திரத்தில் கடன் கொடுத்தவரின் 6 வயது மகளை கடத்தி ஈவு இரக்கமே இல்லாமல், மூச்சு திணறல் ஏற்படுத்தி கொலை செய்த கொடூரம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கடன் கொடுத்து உதவிய பாவத்திற்காக, பெற்ற மகளை இழந்து பெற்றோர் கண் கலங்கி நிற்கும் காட்சிகள் தான் இவை...ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் புங்கனூரில் உள்ள உபேதுல்லா காலனியை சேர்ந்த அசன்துல்லா - சானியா தம்பதியின் 6 வயது மகள் அஸ்மியா, கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த போது திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பல இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாவட்ட எஸ்.பி மணிகண்ட சந்தோலு உத்தரவின் பேரில் 12 தனிப்படைகள் அமைத்து சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி, புங்கனூர் பகுதியில் உள்ள ஏரி கால்வாயில், சிறுமி அஸ்மியா சடலமாக மிதந்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சிறுமியின் மரணம் குறித்து விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன. முன்னதாக சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், உயிரிழந்த சிறுமியின் குடும்பம், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளி வந்துள்ளன. அசன்துல்லா, அதே பகுதியில் வசித்து வரும் ரேஷ்மா என்ற பெண்ணுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். கடனை வாங்கிய ரேஷ்மா வட்டியும் கொடுக்காமல், அசலையும் திருப்பி செலுத்தாமல் இருந்து வந்ததால், பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டு வந்த அசன்துல்லா, ஒரு கட்டத்தில், போலீசில் புகார் அளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பெண், அசன்துல்லாவை பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக, வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த அவரது மகள் அஸ்மியாவை, தனது தாய் ஹசீனா மற்றும் ஒரு சிறுவன் உதவியோடு தனது வீட்டிற்கு அழைத்து சென்று சாப்பாடு கொடுத்து, முகத்தின் மீது கையை வைத்து அழுத்தி மூச்சு திணறல் ஏற்படுத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து சிறுமியின் உடலை, அப்பகுதிக்கு அருகில் உள்ள ஏரி கால்வாயிலும் வீசியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து சிறுவன் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.