பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றப்பத்திரிகையில் முதல் நபராக ரவுடி நாகேந்திரன் பெயரை சேர்த்துள்ள காவல்துறை, 2-வது நபராக சம்போ செந்திலை சேர்த்துள்ளது. 5ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் மொத்தமாக 750 ஆவணங்கள் இணைக்கப்பட்ட நிலையில், அடுத்தக்கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், செம்பியம் போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி நிகழ்ந்த ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை வழக்கு தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடத்தி வரும் செம்பியம் போலீசார், 5ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில் 750 ஆவணங்களை செம்பியம் போலீசார் இணைத்துள்ள நிலையில், வழக்கில் முதல் நபராக ரவுடி நாகேந்திரன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. 2-வது நபராக ரவுடி சம்போ செந்தில் இடம்பெற்றுள்ள நிலையில், மூன்றாவது நபராக ரவுடி நாகேந்திரனின் மகனும், காங்கிரஸ் நிர்வாகியுமான அஸ்வத்தாமன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.அந்த வகையில், சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த ரவுடி நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்ததாக சொல்லப்பட்ட நிலையில், CHARGE SHEET-யிலும்ரவுடி நாகேந்திரனின் பெயர் முதலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, திருவள்ளூர் அருகே ஒரக்காடு பகுதியில் பொன்வண்டு சோப்பு நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த 150 கோடி ரூபாய் நிலத்தை கைமாற்றுவதில் தான், ஆம்ஸ்ட்ராங் தரப்புக்கும், ரவுடி நாகேந்திரன் தரப்புக்கும் மோதல் வெடித்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த நில விவகாரம் தான் . இந்த நில விவகாரம் நீருபூத்த நெருப்பாக மாற, பின்னர் துப்பாக்கியை காட்டி நில உரிமையாளர் தரப்பை மிரட்டியதாக அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டார். அஸ்வத்தாமன் கைதுக்கு ஆம்ஸ்ட்ராங் தான் காரணம் என ரவுடி நாகேந்திரன் தரப்பு பகையுணர்ச்சியை வளர்க்க, அப்போதில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் போட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்தபடியே ரவுடி நாகேந்திரன் ஸ்கெட்ச் போட்டு கொடுக்க, மற்றொரு ரவுடியான சம்போ செந்தில் தான் வெளியே இருந்து அனைத்து காரியத்தையும் கச்சிதமாக முடித்ததாக கூறப்படுகிறது. ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸ் தேடி வரும் நிலையில், தற்போது கைதான 28 பேரில் யார் யாருக்கு என்ன பங்கு என்பது குறித்த முழு விபரமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான மொத்த பண உதவியும் அஸ்வத்தாமனிடம் இருந்து தான் கிடைத்திருக்கிறது என்ற தகவலும் குற்றப்பத்திரிகை மூலம் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை எப்படி அரங்கேற்றப்பட்டது... வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன என்பது உள்பட மொத்த விபரங்களையும் போலீசார் குற்றப்பத்திரிகையில் இணைத்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் சொத்துக்கள், செல்போன்கள், ஆயுதங்கள் பற்றிய விவரங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், ரவுடி திருவேங்கடம் என்பவன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு தப்பிச் சென்ற சம்போ செந்திலை நெருங்க பல வழிகளில் காவல்துறை முயற்சித்தும், அவனைபிடிக்க முடியாத நிலையே இருந்து வருகிறது. வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கும் ரவுடி சம்போ செந்தில் போலீஸ் கையில் சிக்கினால் இன்னும் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.