வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் 5 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு தமிழக அரசின் முன்னேற்பாடு குறைபாடுகளே காரணம் என எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளும் திமுக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் 5 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில் போக்குவரத்து நெரிசலும், போதுமான முன்னேற்பாடுகள் இல்லாததும் தான் காரணம் என்ற கடும்விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆளும் கட்சி சார்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டு வருகின்றன. நிகழ்ச்சியை காணவந்த சிலர் அறிவுறுத்தல்களை கடைபிடிக்காமல் வந்ததே இப்பேர்பட்ட நிகழ்வுக்கு முக்கிய காரணம் என்றார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. விளக்கம் அளித்துள்ளார்போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு கும்பகோணம் மகாமக நிகழ்வை சுட்டிக்காட்டி பதிலளித்தார். வான் சாகச நிகழ்வில் ஏற்பட்ட 5 பேரின் மரணம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் ஏதேனும் குளறுபடிகள் நிகழ்ந்ததா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன். வான் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை இந்த நிகழ்வின் மூலம் தமிழக அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். குளிரூட்டும் வசதியுடன் அதிகார வர்க்கத்தினர் முன்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தமிழக அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள் அதன் மூலம் உலக சாதனை படைக்க இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் முன்பே கூறி வந்த நிலையில் தேவையான ஏற்பாடுகளைக் கூட செய்ய முடியாத தமிழக அரசு தான் 5 பேரின் மரணத்துக்கு பொறுப்பு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே விமான சாகச நிகழ்வு சாவு நிகழ்வாக மாறியதற்கு தமிழக அரசே காரணம் என்றும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாக்கப்பட்டதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என த.வெ.கா தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.ஐந்துபேரின் மரணமென்பது ஆளும் திமுக அரசின் அலட்சியத்தில் விளைந்த படுகொலை என சாடியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடு தழுவிய அளவில் கவனம்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வைக் கூட சரிவர ஒருங்கிணைத்து நடத்தத் தவறியதாக கூறி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதனிடையே 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்த திமுக துணைப்பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான கனிமொழி, சமாளிக்க முடியாத கூட்டங்கள், கூடுவதை இனி தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.