பிரபல பாலிவுட் நடிகர் வரிந்தர் சிங் குமான் (varindersingh ghuman) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம், திரையுலகை அதிர்ச்சி மற்றும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு வயது 41 தான்...பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூரை சேர்ந்தவர் வரிந்தர் சிங் குமான். தனது சிறு வயது முதலே ஃபிட்னஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த இவர், தனது கடின உழைப்பால் 2009ஆம் ஆண்டு மிஸ்டர் இந்தியா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் ஆசியா போட்டியில் 2ஆம் இடம் பெற்று உலகளவில் பிரபலமடைந்தார். இது அவருக்கு, ஹாலிவுட் நடிகரும் பாடி பில்டருமான அர்னால்டின் பிராண்டை ஆசியாவில் பிரதிநிதித்துவப்படுத்த ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது.பாடி பில்டிங் மட்டுமின்றி சினிமாவிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்த வரிந்தர் சிங், 2012ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில் வெளியான ‘கபடி; ஒன்ஸ் அகேன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து ஹிட் கொடுத்த பாலிவுட் படங்களான ‘ரோர்’, ‘மர்ஜவான்’, ‘சிங்கம் 3’ மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் ‘டைகர் 3’ உள்ளிட்ட படங்களில் நடித்து ஒரு நடிகராகத் தன்னை நிலைநாட்டிக் கொண்டார். பொதுவாகவே ஃபிட்னஸ் மற்றும் பாடி பில்டிங்கில் ஈடுபடுபவர்கள், புரோட்டீன் சத்துக்காக சிக்கன், முட்டை போன்ற உணவுகளை தினசரி எடுத்துக் கொள்வது தான் வழக்கம். ஆனால், இந்த ஸ்டீரியோடைப்பை உடைத்தார் வெஜிடேரியனான வரிந்தர் சிங். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வந்தார். மேலும் காய்கள், பழங்கள், கிழங்குகள் போன்றவை மூலம் எப்படி தேவையான அளவு புரோட்டீன் சத்துக்களை பெறுவது, பாடி பில்டிங் செய்வது போன்ற டிப்ஸ்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.இதுமட்டுமின்றி, 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தையும் சமீபத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், 41 வயதே ஆன வரிந்தர் சிங் மாரடைப்பு காரணமாக மறைந்த செய்தி திரையுலகம் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.