உடுமலை அருகே காரும் டெம்போ டிராவலரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தனர். துக்கம் விசாரித்துவிட்டு வீடு திரும்பியபோது நொடிப்பொழுதில் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் துக்கத்தில் உறைந்துள்ளனர்..திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து தியாகராஜன் என்பவர் தனது மனைவி, மகன்கள், பெற்றோர் என 6 பேருடன் காரில் கோவை மாவட்டம் தாமரை குளத்தில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றார். பொலிரோ வாகனத்தில் சென்றுவிட்டு இரவு 1 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தார். திருப்பூர் மாவட்டம் கருப்புசாமி புதூர் பகுதியில் வந்தபோது பாலக்காடு நோக்கி வந்த கொண்டிருந்த டெம்போ டிரவாலர் ஒன்று காரில் நேருக்கு நேர் மோதியது.இதில் தியாகராஜன், அவரது மனைவி ப்ரீத்தி, 11 வயது இளைய மகன் ஜெயப்பிரியன், 65 வயது தாய் மனோன்மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 75 வயது தந்தை நாட்ராயன் மற்றும் 13 வயது மூத்த மகன் ஆகிய இருவருக்கும் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே டெம்போ ட்ராவலரில் வந்த 23 பேரில் 12 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தியாகராஜனின் கார் அப்பளம்போல் நொறுங்கி கிடந்தது. இதேபோல் டெம்போ ட்ராவலரின் முன்பக்கத்தில் பாதி சேதமாகின. விபத்து நடந்த சாலையில் உயிரிழந்தவர்களின் ரத்தத்தோடு வாகனங்களின் கண்ணாடிகள் சல்லி சல்லியாக நொறுங்கி கிடந்தன..கருப்புசாமி புதூர் வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல்வரை செல்லும் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையில் பணிகள் முடிவடையாமலேயே சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டும் உள்ளூர்வாசிகள், அறிவிப்பு பலகையோ, தடுப்புகளோ இல்லை எனவும் புகார் கூறுகின்றனர்..