சென்னையில் தன்னையும் தனது மகனையும் காரில் கடத்தி கொலை செய்ய முயன்றதாக, பாஜக பிரமுகரின் 2 ஆவது மனைவி சிசிடிவி ஆதாரத்தோடு தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குரங்கு மரத்திற்கு மரம் தாவுவதுபோல் மனைவியை மாற்றிக் கொண்டிருக்கும் பாஜக பிரமுகரிடம் இருந்து 90 லட்ச ரூபாய் மற்றும் 500 கிராம் நகைகளை மீட்டு தருமாறு 2 ஆவது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.சென்னை சித்தாலப்பாக்கம் ஜெயா நகரை சேர்ந்த 36 வயதான லட்சுமிபிரியா தனது கணவரை பிரிந்து 2 மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பாஜக சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர் சிவகுமாருடன் காதல் ஏற்பட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சிவகுமார் முதல் திருமணத்தை மறைத்து லட்சுமிபிரியாவை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், 3 ஆவதாக பாஜக கிழக்கு மாவட்ட பெண் செயலாளர் ஒருவருடன் சிவகுமாருக்கு நெருக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது..இதையறிந்த லட்சுமிபிரியா சிவகுமாரிடம் கேட்டபோது சண்டை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதால் லட்சுமிபிரியாவை கடத்தி பிரச்சனைக்கு முடிவுகட்ட சிவகுமார் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இளைய மகனுடன் திருநீர்மலை கோயிலுக்கு சென்ற லட்சுமிபிரியா, தனது வீட்டின் முன்பு காரில் இருந்து இறங்க முயன்றார். அப்போது, மற்றொரு காரில் முகமூடி அணிந்தபடி தனது நண்பர்களுடன் காரில் வந்த சிவகுமார், லட்சுமிபிரியாவை கடத்தியதாக கூறப்படுகிறது..அப்போது சிவகுமாரின் காரில் லட்சுமிபிரியா ஏறாமல் திமிறியதால் அவரை தாக்கி செல்போனை பறித்து, இளைய மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி காரில் ஏற்றி சென்றதாக தெரிகிறது. லட்சுமிபிரியாவின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பெண்ணை கடத்திய கும்பலை பள்ளிக்கரணையில் மடக்கி பிடித்த பெரும்பாக்கம் போலீசார் லட்சுமிபிரியா மற்றும் அவரது மகனை மீட்டனர். தொடர்ந்து இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சிவகுமாருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாக குற்றம்சாட்டி சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த லட்சுமிபிரியா, அடிக்கடி பெண்ணை மாற்றி கொண்டிருக்கும் சிவகுமார் தனக்கு வேண்டாம் எனவும், தனக்கு கொடுக்க வேண்டிய 90 லட்சம் ரூபாய் மற்றும் 500 கிராம் தங்க நகைகளை கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்..சிவகுமார் மீது 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் வெறும் வழக்கோடு முடிக்காமல் தன்னையும் தனது மகனையும் கடத்திய அத்தனைபேரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் லட்சுமிபிரியா..