கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த குரூப் 1 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த விரிவான விசாரணை அறிக்கையை 15 நாட்களில் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குரூப்-1 தேர்வில், தமிழ் வழிக் கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்ததாக 4 பேர் மீதும், மதுரை காமராசர் பல்கலைக்கழக ஊழியர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு முதல் நாள், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்ததற்கு அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம், 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் பயன் அடைந்துள்ளனர் என்ற முழு விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.