மத்திய பிரதேசம் போபால் அருகே 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் இணைந்து நடத்திய கூட்டு முயற்சியில் போதைப்பொருள் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. இதில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், சன்யால் பிரகாஷ் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, பின் தனக்கென ஒரு குழுவை அமைத்துக்கொண்டு போதைப்பொருள் தயாரித்தது தெரிய வந்தது. இந்த தொழிற்சாலையில் நாளொன்றுக்கு 25 கிலோ போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதும் அம்பலமானது. இச்சோதனையின் போது சுமார் 907 கிலோ எடை கொண்ட மெபெட்ரோன் போதை பொருள் மற்றும் 5 ஆயிரம் கிலோ மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.