பெண்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அமைச்சர் பொன்முடியை திமுக பொறுப்பில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நீக்கி உத்தரவிட்டார். பட்டை, நாமம் போடுவதை பற்றி சர்ச்சைகுரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்துள்ளது. சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொன்முடி, சைவம், வைணவ சமய குறியீடுகளான பட்டை, நாமத்தை ஆபாச செய்கையுடன் ஒப்பிட்டு பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சர்ச்சை பேச்சை அடுத்து அமைச்சர் பொன்முடியின் கட்சி பதவியை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பறித்தார். திமுகவில் பொன்முடி வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர், அவருக்கு பதிலாக எம்.பி. திருச்சி சிவாவுக்கு அப்பதவியை வழங்கினார். ஆபாச பேச்சால் கட்சிப் பதவியை இழந்த அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சரை சந்தித்த அவர், தாம் பேசியது குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பொன்முடியின் பேச்சுக்கு திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்தார். எந்த காரணத்திற்காக பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.