சமீபகாலமாக, அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என பேசி வரும் எடப்பாடி பழனிசாமி, 210 தொகுதி எப்படி சாத்தியமாகும் என கணக்கு போட்டு விளக்கி அசர வைத்தார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக பெற்ற வாக்கு சதவீதத்தை ஒன்றாக இணைத்து 210 தொகுதிகளில் வெற்றி என எடப்பாடி பழனிசாமி கட்டிக் கொண்டிருக்கும் கோட்டை உண்மையிலேயே சாத்தியமாகுமா? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பொதுக்குழுவில் கூடியிருந்தவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்க 210 தொகுதிகளில் வெற்றி என எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தாலும் 210 தொகுதிகளில் அதிமுக எப்படி வெற்றி பெறும் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி சொன்ன கணக்கு தான் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.பொதுக்குழுவில் சுமார் ஒரு மணி நேரம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 1991 தேர்தலில் இருந்து பேச தொடங்கினார். அதாவது, 1991 தேர்தலில் திமுக வெறும் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது என்ற நிலையில், அடுத்த முறை 1996-ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த அதிமுக வெறும் 4 இடங்களில் தான் வெற்றி பெற்றது.இதனையடுத்து, 2001ம் ஆண்டு, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், 2006ம் ஆண்டு வெறும் 96 இடங்களில் மட்டுமே வென்ற திமுகவுக்கு மைனாரிட்டி ஆட்சி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இவையெல்லாவற்றையும் வரிசையாக குறிப்பிட்டு கொண்டே வந்த எடப்பாடி பழனிசாமி, 2011 தேர்தலுக்கு வந்தார்.2011 தேர்தலில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுகவுக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை என்ற எடப்பாடி பழனிசாமி, 2014 மக்களவை தேர்தலிலும் திமுகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றார்.தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்கள் சட்டமன்ற தேர்தலில் ஒரு மாதிரி வாக்களிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் வேறு மாதிரி வாக்கு அளிப்பார்கள் எனவும், 2019 நாடாளுமன்ற தேர்தலில் 1 இடத்தில் மட்டும் வெற்றி பெற்ற அதிமுக, 2022 சட்டமன்ற இடைத் தேர்தலில் 9 இடங்களிலும், 2021 சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களிலும் வென்றதாகவும் விவரித்தார்.கடைசியாக, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 23.5% வாக்குகளும், பாஜக கூட்டணி 18% வாக்குகளும் பெற்றிருந்தது என்றார். ஒட்டு மொத்தமாக நாடாளுமன்ற தொகுதிகளை திமுக கைப்பற்றியிருந்தாலும் கூட, 84 சட்டமன்ற தொகுதிகளில் திமுக பெற்ற வாக்குகளை விட அதிமுக மற்றும் பாஜக பெற்ற வாக்குகள் அதிகம் எனவும், 15 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு சதவீதத்திற்கு குறைவாகவும், 18 சட்டமன்ற தொகுதிகளில் 2 சதவீதத்திற்கு குறைவாகவும் தான் திமுக - அதிமுக இடையேயான வாக்கு வித்தியாசம் இருந்தது எனவும் கூறினார்.இதன் மூலமாக 210 தொகுதிகளில் வெற்றி என்பது சாத்தியமாகும் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.எடப்பாடி பழனிசாமி போட்ட தேர்தல் கணக்கு கட்சியினரை குஷியில் ஆழ்த்தினாலும், மற்றவர்களுக்கு ஆழ்ந்த கேள்வியை தான் எழுப்பியுள்ளது. அதாவது, அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக பெற்ற வாக்குகளை ஒன்றாக இணைத்து அந்த வாக்குகள், வருகிற தேர்தலிலும் அப்படியே சிந்தாமல்சிதறாமல் கிடைக்கும் என்ற எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை வியப்பில் தான் ஆழ்த்தியது.அதோடு, கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக, டிடிவி தினகரன், OPS, ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் இருந்தனர் என்ற நிலையில், அவையெல்லாம் சேர்த்து தான் அந்த கூட்டணியின் வாக்கு சதவீதத்தை 18 ஆக உயர்த்தியது. அந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 11 சதவீதம்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.அப்படி இருக்கையில், தற்போதைய சூழலில் அதிமுகவும், பாஜகவும் மட்டுமே கூட்டணியில் இருப்பது ஒருபுறம் என்றால், ஒருங்கிணைப்புக்கு எதிரான மனநிலையில் இபிஎஸ் மற்றும் பல முன்னாள் அமைச்சர்களும் இருக்கும் நிலையில், 210 தொகுதிகள் என்ற இலக்குக்கு எடப்பாடி பழனிசாமி எப்படி ரூட்டு போடுகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. இதுமட்டுமல்லாமல், வருகிற தேர்தலில் விஜய் என்ற புது வரவும் இருக்கிறார். விஜய் பிரிக்கப் போகும் வாக்குகள் திமுகவுடையதா? அதிமுகவுடையதா? என்ற விவாதங்களும் அரங்கேறி வருகின்றன.விஜய்யின் குறியும் திமுக எதிர்ப்பு வாக்குகளை சுற்றிதான் இருக்கிறது. அதுதான் அதிமுகவின் பிரதான வாக்கு வங்கியும் கூட. அதோடு, கடந்த 2024 தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அதிமுகவுடன் SDPI கை கோர்க்க சொற்ப அளவில் இஸ்லாமியர்கள் ஓட்டும் கிடைத்திருக்கும்.அந்த வாக்குகள் தற்போது அதிமுக கூட்டணி பக்கம் செல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கணக்கு எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதனிடையே SIR நடவடிக்கையை வரவேற்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர், அந்த சீரமைப்பு மூலம் திமுக ஆதரவு வாக்குகள் நீக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருப்பதையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, பேச தொடங்கும் முன்பே தமிழக மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் வேறு மாதிரி வாக்கு அளிப்பார்கள், சட்டமன்ற தேர்தலில் வேறு மாதிரி வாக்கு அளிப்பார்கள் என்ற எடப்பாடி பழனிசாமி, கடைசியாக 2024 தேர்தல் முடிவுகளை எடுத்துக்காட்டாக வைத்து 210 தொகுதிகள் வெற்றி என்ற இமாலய இலக்கிற்கு வகுக்கும் வியூகம் பலிக்குமா? என்பது போகபோக தான் தெரியும்.