காதல் மனைவி இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்தவர் உதய் (35). இவரது மனைவி ஹேமா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு சிந்துஸ்ரீ (4), ஸ்ரீஜெய் (3) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா மாரடைப்பால் உயிரிழந்தார். மனைவி இறந்த துக்கத்தில் உதய் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் உதய் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் உதய் தனது வீட்டின் சுவரில் ஐ லவ்யூ ஹேமா என ரத்தத்தில் எழுதி வைத்து விட்டு, மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காதல் மனைவி ஹேமா மாரடைப்பால் உயிரிழந்த துக்கத்தில், குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற உதய், தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.