உத்தரபிரதேசத்தில் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதாக நாடகமாடிய பெண்ணையும், அவருக்கு உதவிய மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியரையும் போலீசார் கைதுசெய்தனர். பரேலியை சேர்ந்த பெண், உள்ளூர் மக்கள் பிரதிநிதி மற்றும் அவரது மகனை சிக்க வைப்பதற்காக, மருத்துவமனை பணியாளர் மற்றும் பதிவு செய்யாத மருத்துவர் ஒருவரது உதவியுடன் ஆபரேஷன் மூலம் நெஞ்சில் புல்லட்டை பதித்துக் கொண்டு, அந்த வடுவை சூடான நாணயத்தை வைத்து கருக்கியுள்ளார். பின்னர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் நாடகமாடியுள்ளார். இந்த சதிவேலை மருத்துவ அறிக்கை மூலம் அம்பலமானதை அடுத்து, போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அந்த பெண் உண்மையை ஒப்புக் கொண்டார்.