வரும் திங்கள் கிழமை துவங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 15 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய பாஜக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. மிகவும் சர்ச்சைக்குள்ளான ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதாவும் தாக்கலாகும் என கூறப்படுகிறது. 11 மசோதாக்கள் ஏற்கனவே நிலுவையில் உள்ளவை என்ற நிலையில், கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் வக்பு வாரிய திருத்த மசோதாவும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா குறித்து ஆராய அரசு நியமித்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அறிக்கை அடுத்த வாரம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கூட்டுக் குழுவின் காலாவதி தேதியை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இதனால் கூட்டத்தொடரில் பாஜக தரப்புக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.