மனைவிக்கு புடவை வாங்க வேண்டுமானாலோ அல்லது வீட்டிற்கு மிக்சி கிரைண்டர் உள்ளிட்ட எந்த பொருட்களை வாங்க வேண்டுமானாலோ இனி உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரகாண்ட் மாநில அரசின் விநோத அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு ஊழியர்கள் கையூட்டு பெறுவதையும், சொத்துகளை வாங்கி குவிப்பதையும் தடுப்பதற்காக பல்வேறு கெடுபிடிகளை மாநில அரசு விதித்திருக்கிறது. அதன்படி, 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வாங்க கூடிய பொருட்கள் மற்றும் அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றிற்கும் உயரதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஊழியர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.