டாடா குழுமத்தின் தலைவராக இருந்த 86 வயதான ரத்தன் டாடா, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து மும்பையில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக தெற்கு மும்பையில் உள்ள என்சிபிஏ எனப்படும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் வைக்கப்பட்டது.மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர், மலர் வளையம் வைத்து ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நடிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வருகை தந்த ரத்தன் டாடாவின் மாற்றாந்தாய் சிமோன் டாடா, சகோதரர் ஜிம்மி நாவல்((Simone Tata and younger brother Jimmy Naval)) ஆகியோர் கண்கலங்கியபடி ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நாய்கள் மீது பேரன்பு கொண்ட ரத்தன் டாடாவின் உடலுக்கு, அவரின் வளர்ப்பு நாய் கோவாவும் இறுதி அஞ்சலி செலுத்தியது.இதனிடையே ரத்தன் டாடாவின் உடலுக்கு அருகிலேயே நின்றிருந்த அவரது இளம் நண்பரும், உதவியாளருமான சாந்தனு நாயுடு, உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுது பிரியாவிடை கொடுத்தார்.தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, வெள்ளை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள், கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர்.அதன் பிறகு, மும்பை வோர்லியில் உள்ள மயானத்தில் வைத்து இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட பின்னர், துப்பாக்கி குண்டுகள் முழங்க, ரத்தன் டாடாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.