பெங்களூருவில் இன்போசிஸ் நிறுவனத்தின் கழிவறையில் மறைந்திருந்து, பெண் ஊழியர்களின் ஆபாச படம் எடுத்த சக ஆண் ஊழியரை போலீசார் கைது செய்தனர். எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள இன்போசிசின் அலுவலகத்தில் ஆந்திராவை சேர்ந்த நாகேஷ் மாலி என்ற 28 வயதான ஊழியர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் தேதி கழிவறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவர், செல்போன் கேமரா மூலம் தாம் படம் பிடிக்கப்படுவதை கண்டுபிடித்து, கழிவறைக்குள் ஒளிந்திருந்த நாகேஷ் மாலியை கையும் களவுமாக பிடித்தார். இதை அடுத்து அங்கு விரைந்து வந்த சக ஊழியர்கள் அவரை பிடித்து, அவரது மொபைல் போனை பரிசோதித்ததில் பல்வேறு பெண்களின் 30 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர். எலக்ட்ரானிக் சிட்டி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து நாகேஷ் மாலி கைது செய்யப்பட்டார்.