நாட்டையே உலுக்கிய ஆம்னி பேருந்து விபத்து தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் 20 பேரின் உயிர் போக பேருந்தின் சரக்குப் பெட்டியில் இருந்த ஒற்றை பார்சல் முக்கிய காரணமாக இருந்தது தெரிய வந்துள்ளது. நடந்தவை குறித்து விரிவாக பார்க்கலாம்.... அண்மையில், ஆந்திராவில் நடந்தேறிய ஆம்னி பேருந்து விபத்து, நாட்டையே உலுக்கியது. இரு சக்கர வாகனத்தில் மோதி, மொத்த பேருந்துமே பற்றி எரிந்த சம்பவத்தில் 19 அப்பாவி பயணிகள் உட்பட பைக்கை ஓட்டிச் சென்றவர் என மொத்தமாக 20 பேர் பலியாகினர். பேருந்தில் இருந்து வெளியேற முடியாமல் பற்றி எரிந்த தீயில், பயணிகள் துடிதுடித்து இறந்த செய்தி இந்தியாவையே உலுக்கியது. இந்த நிலையில் தான், சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் அடங்கிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். முதற்கட்ட ஆய்வில், பேருந்தின் தீ விபத்து தீவிரமடைய பேருந்துக்குள் இருந்த ஒரு பார்சல் முக்கிய காரணமாக அமைந்தது, தெரிய வந்துள்ளது. பேருந்தின் சரக்குப் பெட்டியில், 234 ஸ்மார்ட் ஃபோன்கள் அடங்கிய பார்சல் வைக்கப்பட்டிருந்து உள்ளது. சுமார் 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த பார்சலை ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மங்கநாத் என்பவர் பேருந்தில் அனுப்பியுள்ளார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இ-காமர்ஸ் நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் வகையில் செல்ஃபோன் பார்சல் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. விபத்தின் போது பேருந்துக்கு அடியில் பைக் சிக்கிய நிலையில், பெட்ரோல் கசிவு ஏற்பட்டு உராய்வில் தீப்பற்றி எரிய துவங்கியதாக கூறப்படுகிறது. எனினும், பேருந்துக்கு அடிப்பகுதியில் இருந்த ஸ்மார்ட் ஃபோன் பார்சல் தீயை மளமளவென அதிகரிக்க முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர் தடயவியல் நிபுணர்கள். தீயின் வெப்பம் செல்ஃபோன் பேட்டரிகளை அடைந்த போது, பேட்டரிகள் தொடர்ச்சியாக வெடிக்கத்துவங்கியதால் பெரிய அளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இத்தோடு, பேருந்தில் பொருத்தப்பட்ட ஏசியின் மின்சார பேட்டரிகளும் வெடித்தது, தீ விபத்தின் வீரியம் அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தை நேரில் பார்த்தவர்களும் செல்ஃபோன் பேட்டரிகள் வெடித்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, பேருந்துக்கு அடியில் பைக் சிக்கியபோது ஏற்பட்ட பெட்ரோல் கசிவு, உராய்வால் தீப்பற்றத் தொடங்கியது, செல்ஃபோன் பேட்டரிகளும், ஏசியின் பேட்டரிகளும் வெடிக்கத்தொடங்கியது என சங்கிலித் தொடராக விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. ஒருவேளை 234 செல்ஃபோன் அடங்கிய பார்சல் இல்லாமல் போயிருந்தால், இவ்வளவு வேகத்தில் தீ பரவி இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.