கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், சட்டமன்றக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. பெங்களூருவில் RCB அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்ததன் எதிரொலியாக, கூட்டத்தை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா, கர்நாடகா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடும் நிகழ்ச்சிகளுக்கு போலீசாரின் முன் அனுமதி பெறுவது மட்டுமல்லாமல், உயிரிழப்பு ஏற்பட்டால் உயிரிழந்தவரின் குடும்பங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா, இந்த மசோதா காவல்துறையினரின் தவறான பயன்பாட்டிற்கான ஒரு கருவியாக மாறக்கூடும் என்று கருத்து தெரிவித்தார்.