இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சுதாகர் ரெட்டியின் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதாகர் ரெட்டி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.சுதாகர்ரெட்டியின் வாழ்க்கை பயணம்:எஸ்.சுதாகர் ரெட்டி, தற்போதை தெலுங்கானா மாநிலம், மகபூப்நகர் மாவட்டத்தில், விடுதலைப் போராட்ட வீரர் குடும்பத்தில் 1942 மார்ச் 25ஆம் தேதி பிறந்தவர். ஐதராபாத் நகரில் உள்ள உஸ்மானிய பல்கலைக்கழகத்தில் கல்லூரி கல்வியும், சட்டப்படிப்பும் முடித்தவர். கர்னூலில் பள்ளிக் கல்வி பெற்று வந்த போதே, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் இணைந்து பள்ளியின் அடிப்படை வசதிக்காக போராட்டத்தை தொடங்கியவர். புதுச்சேரியில், 1965-66ல் நடைபெற்ற அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் 17ஆவது தேசிய மாநாட்டில் அதன் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர். ஒன்றுபட்ட ஆந்திர மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இ.கம்யூ. கட்சியின் ஆந்திர மாநிலச் செயலாளர் என படிப்படியாக பல பொறுப்புகளில் இருந்தவர். இ.கம்யூ. கட்சியின் தேசிய துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் பொறுப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தோழமை உறவை வலுப்படுத்தி வந்தவர். உலக கம்யூனிஸ்டு இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செலுத்தியவர். கட்சி எல்லைகளை கடந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொது வாழ்வு பிரமுகர்கள், துறை சார்ந்த நிபுணர்களின் நன்மதிப்பை பெற்றவர். நல்கொண்டா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து 1998 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் இருமுறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலன் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராக இருந்து, அமைப்பு சாராத் தொழிலாளர்களின் சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்தவர். இ.கம்யூ. பொதுச் செயலாளர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி வந்த சுதாகர் ரெட்டி, ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொல்லம் கட்சி மாநாட்டில் தாமாக முன் வந்து, பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். சுதாகர் ரெட்டி - பி.வி.விஜயலட்சுமி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்; முதல்வர் முக.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் பதிவில், ’கூட்டணிப் பேச்சுவார்த்தை, கலைஞர் நினைவேந்தல் என அவர் தமிழ்நாடு வந்தபோதெல்லாம் அவரது அன்பையும் தெளிவான பார்வையையும் அருகில் இருந்து கண்டுணர்ந்திருக்கிறேன்’ என்று நினைவு கூர்ந்துள்ளார். சுதாகர் ரெட்டி மறைவுக்கு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்கள் கட்சிக் கொடி தாழ்த்தி மரியாதை செலுத்தும் என்றும் இ.கம்யூ. தெரிவித்துள்ளது.