குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனிப்பட்ட காரணங்களுக்காக, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஜூலை 21ஆம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, புதிய துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்ற பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. வேட்பாளர் அறிவிப்புக்கு பின்னர், பிரதமர் மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில் கூறி இருப்பதாவது:சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். பொது வாழ்க்கையில் அவரது நீண்ட அனுபவமும், பல்வேறு துறைகளில் அவரது அனுபவமும் நம் தேசத்தை மேலும் செழுமைப்படுத்தும். அவர், எப்போதும் போல அதே அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் தேசத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.