பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 30 க்கும் மேற்பட்ட அதிருப்தி வேட்பாளர்களால் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. 243 உறுப்பினர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வரும் ஆறாம் தேதி நடக்கிறது. இதில் இரு முன்னணிகளையும் சேர்ந்த 30 அதிருப்தி வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு சொந்த கட்சியில் தேர்தல் டிக்கெட் கிடைக்கவில்லை என்பதால் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் உள்ளிட்ட சிறு கட்சிகளில் சேர்ந்து என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுகின்றனர். வேறு சிலர் சுயேச்சைகளாகவும் நிற்கின்றனர். தலைநகர் பாட்னாவில் உள்ள பல தொகுதிகளில் போட்டியிடும் அதிருப்தி வேட்பாளர்களுக்கு சொந்த செல்வாக்கு உள்ளதால், என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.