உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட சாதி கொடுமை நாடு தழுவிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவின் புறநகர் பகுதியில் உள்ள கோவில் அருகே சிறுநீர் கழித்தார் என்பதற்காக 60 வயது பட்டியலின நபரை அந்த இடத்தில் நாவால் நக்கவைத்து வன்கொடுமை செய்த சுவாமி காந்த் என்பவனை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் 25 வயதான பட்டியலின நபரை அவரது முன்னாள் முதலாளி இருவருடன் சேர்ந்து கடத்தி சென்று அடித்து உதைத்து சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்திலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். பாஜக ஆளும் இந்த இரண்டு மாநிலங்களிலும் விளிம்பு நிலை மக்கள் வன்கொடுமைக்கு தொடர்ந்து ஆளாக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.