கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் வார விடுமுறை நாளான இன்று குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைவாக விழும் பகுதிகளில் மட்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் மலையோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. தற்போது மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டு வரும் நிலையில் இதன் காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் காலை முதலில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.திருப்பரப்பு அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடியும் தங்கள் குழந்தைகளுடன் விளையாடியும் தங்களுடைய விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளதால் திற்பரப்பு அருவி பகுதி களைகட்டி வருகிறது.மேலும் மலையோரம் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவி பகுதியில் எந்த நேரமும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு தண்ணீர் குறைவாக வரும் பகுதிகளில் மட்டுமே சுற்றுலா பயணிகள் தற்போது குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.