குரங்கம்மை குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை- சவுமியா சுவாமிநாதன்எப்போது மீண்டும் பெருந்தொற்று வரும் என தெரியாது முன்கூட்டியே நாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது - சவுமியாசின்னம்மை உள்ளிட்ட அம்மை நோய்களுக்கான தடுப்பூசியை மீண்டும் தயாரித்து, இருப்பு வைப்பது நல்லது என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.அணு ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் கல்பனா சங்கர் எழுதிய "The scientists entrepreneur" என்ற சுயசரிதை புத்தக வெளியீட்டு விழா சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் புத்தகத்தை வெளியிட்டார்.தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் சவுமியா சுவாமிநாதன்;குரங்கம்மை நோய் தடுப்பிற்காக உலக சுகாதார மையத்திலிருந்து மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.பாக்ஸ் என்பது சின்னம்மை குடும்பத்தைச் சார்ந்தது. சின்னம்மை பாதிப்பு போல பார்ப்பதற்கும், அதேபோல் தான் இருக்கும். காய்ச்சல், அம்மை போடுவது, சோர்வாக இருப்பது இதெல்லாம் இவற்றின் அறிகுறி. ஆப்பிரிக்காவில் பெரிய பெருந்தொற்றாக இருந்தது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். தற்போது அவசரமாக அறிவிக்கப்பட்டுள்ள காரணம் எம்பாக்ஸ், கிளேட்-1 என மாறியுள்ளது. அதில் இறப்பு விகிதம் கொஞ்சம் அதிகமாக 3% இருக்கின்றது. முதலில் மிருகங்களிடமிருந்து பரவிய வைரஸ் இப்போது, மனிதர்கள் மூலம் பரவுகின்றது. மிக நெருக்கமாக இருந்தால் மட்டுமே பரவும். கொரோனா போல காற்றில் பரவக்கூடிய நோய் கிடையாது. அதனால் அச்சப்பட தேவையில்லை. ஆனால் சில ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமாக பாதித்துள்ளது. அதற்கு தடுப்பூசிகளாக சின்னம்மைக்கு பண்ணக்கூடிய தடுப்பூசிகளை இதில் பயன்படுத்தலாம். ஆனால் அந்த மருந்துகள் குறைவாக உள்ளது. ஆப்பிரிக்காவில் அந்த தடுப்பூசிகள் சென்று சேர வேண்டும், இல்லை என்றால் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் என பலருக்கும் பாதிப்பு வரவாய்ப்புள்ளது. இந்தியாவில் கவலைப்படும் நிலையில் இல்லை. அரசு ஏற்கனவே 30 ஆய்வகங்கள் தயார் செய்திருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருந்து உள்நுழையக்கூடிய அனைவருக்கும் சோதனை செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மேற்கொண்டு வருகின்றார்கள். இப்போதைக்கு பாதிப்புகள் இல்லை, வருவதற்கும் வாய்ப்புகள் இல்லை. அதிகபட்சமாக ஒருசிலர் பாதிப்புடன் வரலாம், அதை கண்டுபிடித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தால் சரியாகி விடுவார்கள். இந்தியாவில் நமக்கு ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றது. எனவே நாம் தடுப்பூசி தயாரிப்பதிலும் கவனம் செலுத்தலாம். 1980களில் சின்னம்மை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதால் அதற்கான தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டு விட்டது. 1980க்கு பின் பிறந்தவர்களுக்கு அந்த எதிர்ப்பு சக்தி கிடையாது. எம்.பாக்ஸ் அல்லது அம்மை நோய்க்குடும்பம் தொடர்பான நோய் வந்தால் பெரும் நோயாக மாறலாம் எனவே சின்னம்மை தடுப்பூசி மற்றும் அம்மை நோய் சார்ந்த தடுப்பூசிகளை தயாரித்து வைத்துக் கொள்வது நல்லது. உலக சுகாதார மையத்துடன் ஐ.சி.எம்.ஆர் ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தியாவில் எந்தெந்த வைரஸ் குடும்பத்திற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கலாம் என்பதை என்பது குறித்து பேசி இருக்கிறார்கள். அம்மை ஒரு தனி குடும்பம் தான், இதுபோல 30 வகையான வைரஸ் குடும்பங்கள் இருக்கின்றன. முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது. எல்லாமே பெருந்தொற்றாக வரும் என்று சொல்ல முடியாது, ஆனால் கோவிட் வந்ததன் பின்பாக நாம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டோம். ஒரு புது அதிர்ச்சியாக வரக்கூடாது. எப்படியும் ஒரு வருஷத்தில் தடுப்பூசி கண்டுபிடித்தாலும், அதற்குள் நிறைய பேர் இறந்து விட்டார்கள். அதனால் தான் உலக சுகாதார மையம் அனைத்து நாடுகளுடன் சேர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக மருத்துவமனைகள் தயார் செய்தல், தனிமைப்படுத்துதல், ஆக்சிஜன் தயார் நிலை உள்ளிட்ட நடவடிக்கைகளை அறிவுறுத்தியுள்ளது. எப்போது அடுத்த பெருந்தொற்று வரும் என தெரியாது. எப்போது எந்த மாதிரியான வைரஸ் என்பது யாராலும் முன்கூட்டியே கண்டறிய முடியாது, முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது, என்றார்.