இரண்டாவது நாளாக தொடரும் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களின் போராட்டம்.20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 917 ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம். வெறிச்சோடி காணப்பட்ட அலுவலகங்கள்.தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் இரண்டு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 917 ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்கள், உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை சிறப்பு நிலை வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். மேலும் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடு கட்டும் திட்டங்களுக்கு உரிய பணியிடங்களை புதிதாக ஏற்படுத்த வேண்டும், கிராம ஊராட்சி செயலர்களுக்கு 20% மற்றவர்களுக்கு 10% இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதில் இயக்குனர் அலுவலகத்திலும் தலைமைச் செயலகத்திலும் கடைபிடிக்கும் சிகப்பு நாடாத் தன்மை மற்றும் வீண் கால தாமதங்களை கைவிட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலுமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்தின் காரணமாக கலைஞர் கனவு இல்லத்திற்கு பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பொதுமக்களின் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அரசு ஊழியர்களின் போராட்டத்தை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இரண்டு நாட்களாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.