நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் காட்டு யானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தி வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக நியாய விலை கடைக்கு மூன்றடுக்கு இரும்பு கதவுகள் அமைத்து பொதுமக்களுக்கு தடையில்லா ரேஷன் உணவு பொருட்களை வழங்கும் புதிய முயற்சியை கூட்டுறவுத் துறையினர் மேற்கொண்டுள்ளனர்...... இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப் பகுதியில் அமைந்துள்ளது மசினகுடி கிராமம். 1100 குடும்ப அட்டைகள் கொண்ட இக்கிராமத்தில் இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கிராமப் பகுதிக்குள் நுழைந்து குறிப்பாக நியாய விலை கடையின் கதவுகளை உடைத்து ரேஷன் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற உணவு பொருட்களை சாப்பிட்டு கடைகளை சேதப்படுத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நீலகிரி மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் இணைப்பதிவாளர் தயாளன் தலைமையில் மாவட்டத்திலேயே முதன்முறையாக மசினகுடி கிராமத்தில் உள்ள நியாய விலை கடைக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் நியாய விலை கடை முன்பு சோலார் கம்பிகள் மூலம் கடைச் சுற்றிலும் அமைக்கப்பட்டும், முதலில் நுழைவாயிலில் இரும்பு கெட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டாவதாக இரும்பு கதவு ஒன்று பொருத்தப்பட்டும், மூன்றாவது இரும்பு ஷெல்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் யானைகள் நியாய விலை கடையை உடைப்பதை மசினகுடி கிராமத்தில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் நீலகிரி மாவட்டத்தில் கரடி மற்றும் காட்டு யானை போன்ற வன விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ள நியாய விலை கடைகளில் இதுபோன்ற மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.