கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டிட கழிவுகளை அக்டோபர் 14ம் தேதிக்குள் முழுமையாக அகற்றாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. துறைமுகம் - மதுரவாயல் அதிவிரைவு ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், கட்டிடக்கழிவுகளை கொட்டி தூண்கள் அமைத்து வருகிறது.இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் ஏன் கழிவுகளை அகற்றவில்லை என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திடம் பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. மேலும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ள சூழலில், கூவம் ஆற்றில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை முழுமையாக அகற்றப்படாதது குறித்து அதிருப்தியும் தெரிவித்தது.