தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் என்பது அமித்ஷாவின் கனவாக இருக்கலாம் எனவும், ஆனால் டெல்லியில் விளையாடியதுபோல் தமிழ்நாட்டில் விளையாட முடியாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா டெல்லியில் நடந்ததுபோல் தமிழ்நாட்டிலும் ஆட்சிமாற்றம் நிகழும் என்று தெரிவித்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தமிழ்நாட்டை டெல்லி அல்லது மராட்டிய மாநிலத்தை போல் ஆக்கிவிடலாம் என பாஜக முயற்சிப்பதாகவும், அதை இந்த மண்ணில் அரசியல் முதிர்ச்சி அடைந்த தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் கூறினார்.