திருவாரூரில், இன்ஸ்டா மூலம் இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்ட இளைஞர், திருமணம் செய்து கொள்ள காதலி மறுத்ததால், விரக்தியடைந்து குளத்தில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஸ்டாவில், உருகி உருகி பேசிய காதலி, கல்யாணம் என்று கூறிய உடனே சாக்கு போக்கு சொன்னதால் மனம் நொந்து உயிரை மாய்த்துக் கொண்டார் காதலன்...திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். பிபிஏ முடித்துவிட்டு வேலை தேடி வரும் இந்த இளைஞருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர் தான் கும்பகோணத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ. பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இவருக்கும் பிரவீனுக்கும் இன்ஸ்டா மூலம் முளைத்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்திருக்கிறது.அடிக்கடி ஒன்றாக ஊர் சுற்றி டேட்டிங் செய்யவில்லை என்றாலும் எப்போதாவது இருவரும் தனிமையில் சந்தித்து பேசி வந்ததாக தெரிகிறது. பிரவீன்குமாரும் ஜெயஸ்ரீயும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது காதலும் பரம ரகசியமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும், இந்த காதல் விவகாரம் எப்படியோ ஜெயஸ்ரீ பெற்றோரின் காதுகளுக்கு எட்டவே, வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பிரவீனை அழைத்த ஜெயஸ்ரீ, ”இதெல்லாம் செட் ஆகாது டா... வீட்ல ஒத்துக்க மாட்டாங்க” என கூறி காதலை முறித்துக் கொள்ள முயன்றதாக தெரிகிறது. பிரவீன் குமாரோ விடாப்பிடியாக இருந்ததால், அவரை நேரில் வரச்சொல்லி சமாதானம் செய்ய முயன்றிருக்கிறார் ஜெயஸ்ரீ. இருவரும் சேர்ந்து திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள விநாயகர் கோயில் குளத்தின் ஓரம் அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருக்கையில், விரக்தியடைந்த பிரவீன் குமார் குளத்தில் குதித்ததாக கூறப்படுகிறது. குதித்த வேகத்தில் பிரவீன்குமார் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. பிரவீன் குதித்த உடன் ஜெயஸ்ரீயும் குளத்தில் இறங்கி நீந்தி சென்ற போதிலும், அவரால் பிரவீனை உயிருடன் மீட்க முடியாமல் போனது.ஜெயஸ்ரீயை மட்டும் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவலளித்து பிரவீன் குமார் சடலத்தையும் மீட்டனர். விவரமறிந்து நிகழ்விடத்துக்கு வந்த பிரவீனின் குடும்பத்தினர் அவரது சடலத்தை கண்டு கதறி துடித்தனர்.