புதுச்சேரி நிர்வாகத்தின் கீழ் வரும் ஏனாம், மழை வெள்ளத்தால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. புதுச்சேரியின் ஏனாம் பிராந்தியம், ஆந்திர மாநில காக்கிநாடா அருகே உள்ளது. ஆந்திர பகுதியில் கனமழை பெய்து வந்த நிலையில், இந்த மழையானது ஏனாமையும் தொற்றிக் கொண்டது. நேற்று நள்ளிரவு முதல் ஏனாமில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 8.6 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது. இதனால், ஏனாமில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. வழிபாட்டுத் தலங்கள், பள்ளி, கல்லூரி, காவல் நிலையம் ஆகியவற்றை மழை நீர் சூழ்ந்துள்ளது. அனைத்து வாய்க்கால்களும் நிரம்பி, வீடு, சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல் ஓடுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டல நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பொது மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏனாமில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.