பாம்பு கடித்ததால், சிகிச்சைக்காக வந்த பெண், தன்னை கடித்த பாம்பை பிடித்துக் கொண்டு வந்ததால், மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த, 48 வயதான நீலவேணி, வீட்டின் பக்கவாட்டுப் பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார் அப்போது, செடிகளை சுத்தம் செய்யும் போது, செடிகளின் அடியில் இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் நீலவேணியை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வரும்போதே தன்னை கடித்த பாம்பை பிடித்து, பையில் எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.