குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, கருப்பு நிற உடையுடன் தலையில் இருமுடி கட்டுடன் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தார். கேரளாவிற்கு, நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்றைய தினம் தனி விமான மூலம் திருவனந்தபுரத்திற்கு வந்தடைந்தார் குடியரசுத் தலைவர். அவரை கேரள முதல்வர், கேரள கவர்னர், திருவனந்தபுரம் மேயர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இந்த நிலையில், முக்கிய நிகழ்வாக, சபரிமலை சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்யவதற்காக, பம்பை வந்தடைந்த குடியரசுத் தலைவர், தலையில் இருமுடி கட்டுடன் கருப்பு நிற உடையுடன் தனி ஜீப் மூலமாக பம்பையில் இருந்து சபரிமலைக்கு புறப்பட்டார். சபரிமலைக்கு சென்ற அவர், சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவரின் வருகையால், சாமி தரிசனம் செய்வதற்காக தேவசம் போர்டு சார்பில் பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதலாவதாக பம்பையில் உள்ள பிள்ளையார் கோயிலில் தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவரின் வருகையை முன்னிட்டு, பம்பை முதல் சபரிமலை சன்னிதானம் வரை உள்ள மலைப்பகுதிகள் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, முன்னதாகவே இன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.