கூடலூர் அருகே 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையை பிடிக்க, 2 கும்கி யானைகளுடன் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள ஓவேலி பகுதியில், இதுவரை 12 பேரை கொன்ற ராதாகிருஷ்ணன் என்ற யானையை பிடிக்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ் குமார் டோக்ரா, மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் யானையை பிடிக்க உத்தரவு பிறப்பித்தார். மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வனச்சரகர்கள் மற்றும் வனப் பணியாளர்கள், என்ஜிஓ, தன்னார்வலர்கள் கொண்ட குழு, யானையை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. யானையின் நகர்வு, உடல்நலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அதை கண்காணித்து பிடிக்க தயாராகி வருகின்றனர். யானையைப் பிடிக்க முதுமலை யானைகள் முகாமில் இருந்து சீனிவாசன், பொம்மன் என்ற இரண்டு கும்கி யானைகள் ஓவேலி பகுதிக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தரைவழி மட்டுமின்றி, கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் மக்களை அச்சுறுத்தி வரும் ராதாகிருஷ்ணன் என்ற யானையை கண்காணித்து வரும் பணி, இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.