கரூர் துயர சம்பவம் நடந்து 81 நாட்களுக்குப்பிறகு, மஞ்சள் நகர மக்கள் மத்தியில் அரைமணிநேரம் அனல்பறக்க பேசி உள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், களத்தில் உள்ளவர்களை தான் எதிர்க்க முடியும், ஆட்டத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியாவே இல்லையென தெரிவித்துள்ளார். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்குறீங்களே என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய டயலாக் சிலப்பதிகாரத்தில் இருந்து எடுக்கப்பட்டதா? என விமர்சித்த விஜய், தீய சக்தியான திமுகவுக்கும் தூய சக்தியான த.வெ.கவும் தான் வரும் தேர்தலில் போட்டியே என சவால் விட்டார்.ஈரோட்டில், சுட்டெரிக்கும் வெயிலில் அரைமணிநேரம் இடைவிடாது பேசிய விஜய், மஞ்சள் நகரத்தில் கால்வாய் கட்டிய காளிங்கராயன் ஹிஸ்ட்ரி முதல் காஞ்சிபுரத்தில் தான் பேசியதை தொடர்ந்து ஏற்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். சுபகாரியங்கள் நடக்கும் இடத்தில் முன்னுரிமை பெறுவதே மஞ்சள்தான் என மாவட்டத்தின் பெருமையை கூறி பேச்சை ஆரம்பித்த விஜய், த.வெ.க.கொடியிலும் ENERGETIC ஆக மஞ்சள் நிறம்தான் உள்ளது என கூறினார்.மேலும், காளிங்கராயன் கால்வாயை கட்ட அவரது தாய் அளித்த ஊக்கத்தைபோல் தனக்கு ஈரோடு மக்கள் தைரியம் கொடுப்பதை கண்டு கலக்கத்தில் இருக்கும் சூழ்ச்சிக்கார கூட்டம், தன்னைப்பற்றி என்ன அவதூறு பரப்பலாம்? மக்களிடம் இருந்து எப்படி பிரிக்கலாம்? என்ற வன்மத்திலேயே சுற்றுவதாகவும், அவர்களுக்கு அதுதான் பிழைப்பு என்றும் சீறிய விஜய், தனக்கும் மக்களுக்குமான உறவு தான் சினிமாவுக்கு வந்த 10 வயதில் இருந்தே உள்ளது எனவும் பாவம் சூழ்ச்சிக்கார கூட்டத்திற்கு அது தெரியாது எனவும் கூறினார்.மக்களுக்காக இருக்குற இந்த விஜியை, அவர்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் எனக்கூறிய விஜய், அதே மக்களை நோக்கி என்னப்பா நிற்பீர்கள்தானே? என சிரித்தபடியே கேள்வியும் கேட்டுக் கொண்டார். அப்போது, அதில் என்ன சந்தேகம்? என்பதுபோல் மக்கள் பக்கத்தில் இருந்தும் ஆம் என்ற சத்தம் காதை கிழித்தது. ஒரு பாம்பு வளைந்து நெளிந்து சென்ற பாதையில்தான் காளிங்கராயன் கால்வாய் வெட்டினார், அதன்மூலம்தான் விவசாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என சொல்லிக் கொண்டிருந்தபோதே, த.வெ.க. தொண்டர் ஒருவர் SPEAKER TOWER மீது ஏறி விஜயை நோக்கி FLYING KISS-களை பறக்கவிட்டார். அதை பார்த்து சட்டென டென்ஷன் ஆன விஜய்யின் கண்முன்னே, கரூர் சம்பவம் தான் வந்து சென்றதோ என்னவோ ஆட்காட்டி விரலை நீட்டி, தம்பி ப்ளீஸ் கீழே இறங்குப்பா, நீ இறங்கினால்தான் முத்தம் கொடுப்பேன் எனக்கூறிவிட்டு அந்த இளைஞர் இறங்கும்வரை காத்திருந்தார்.அந்த இளைஞர் இறங்கியபிறகுதான் அடுத்து பேசவே ஆரம்பித்தார்.காளிங்கராயன் கதையை முடிக்கவிடமாட்டார்கள்போல என மனசுக்குள் ஒருபக்கம் சலிப்பு இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாத விஜய், அவரைபோன்று மக்களுக்கு நல்லது செய்துவிட்டு ஆட்சியாளர்கள் கதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் எந்த நல்லதுமே செய்யாமல் வெறும் கதைகளை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக் கொள்வது? என கேள்வி எழுப்பினார்.அண்ணாவும்-எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து, அவர்கள் பெயரை பயன்படுத்தக்கூடாது என யாரும் அழக்கூடாது என கிண்டலடித்ததோடு, த.வெ.க. ஒரு பொருட்டே இல்லை எனக்கதறும் கூட்டங்களுக்கு நாங்கள் யாரை பேசினால் என்ன? என்ன பேசினால் என்ன? ஏன் ஆளாளுக்கு புலம்பி தள்ளுகிறீர்கள்? என கேள்வியும் எழுப்பினார்.ஆட்சியில் உள்ளவர்களுக்கு அவர்கள் கொள்ளையடித்து வைத்திருக்கும் பணம்தான் துணை என்றால், தன்மீது மக்கள் வைத்திருக்கும் பாசம்தான் தனக்கு துணை என சென்டிமெண்ட்டாக பேசிய விஜய், தயவுசெய்து பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிக்க வேண்டாம் எனவும் கூறினார்.பெரியார் பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் அரசியல் எதிரி யார் என ரிப்பீட் மோடில் மக்கள் வாயால் பதிலை கேட்ட விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் களத்தில் இருப்பவர்களைதானே எதிர்க்க முடியும்? ஆட்டத்தில் இல்லாதவர்களையெல்லாம் எப்படி எதிர்க்க முடியும், நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக எதிர்க்க முடியுமா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா? நீட் ரத்து, கல்விக்கடன் ரத்து என வண்டி வண்டியாய் வாக்குறுதி கொடுத்ததையெல்லாம் ஆட்சியில் உள்ளவர்கள் செய்துவிட்டார்களா? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். தன்னை, சினிமா டயலாக் பேசுவதாகவும், பஞ்ச் டயலாக் பேசுவதாகவும், 10 நிமிடம் பேசுவதாகவும் குறைகூறும் கூட்டங்களுக்கு நாங்கள் என்ன பேசினால் என்ன? எத்தனை நிமிடங்கள் பேசினால் என்ன? மக்கள் பிரச்சனைகளை பேசுவது அரசியல் இல்லையென்றால் வேறு எதுதான் அரசியல்? என்று விஜய் கேள்வி எழுப்பினார்.இதனை தொடர்ந்து, வாயால் வடை சுட நாங்கள் என்ன திமுகவா? தவெகடா என பஞ்ச் டயலாக் பேசிய விஜய், எம்ஜிஆரும் ஜெயலலிதாகவும் திமுகவை கடுமையாக விமர்சித்தபோது ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள் என யோசித்துள்ளேன், ஆனால் தற்போதுதான் புரிகிறது அவர்கள் செய்ததையே தானும் ரிப்பீட் செய்கிறன், அதற்கு காரணம் திமுக தீய சக்தி என்பதுதான் என கர்ஜித்தார்.தீய சக்தியான திமுகவுக்கும், தூய சக்தியான தவெகவுக்குதான் வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் போட்டியே, தீய சக்தி திமுகவை அழிக்க தூய சக்தி தவெகவால் மட்டுமே முடியும் என்றும் அடித்துக் கூறினார்.