கரூரில் மக்கள் கூட்டம் அலை மோதிய போது, கேரவனுக்குள் சென்று விஜய் மின் விளக்கை அணைத்துக் கொண்டது ஏன்? என செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பி உள்ளார்.கரூரில், செய்தியாளர்களை சந்தித்த செந்தில் பாலாஜி கூறியதாவது: இது, 41 பேரின் இறப்பு சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வு. ஜெனரேட்டர் அறையில் சென்று யார் அதை நிறுத்தியது? இத்தனை ஆயிரம் பேர் இருக்கும் சூழலில், யாராவது தவறாக உள்ளே நுழைந்து அசம்பாவிதம் ஏற்படுத்தி விட முடியுமா? அங்கே தவெக தொண்டர்களும், கட்சியினரும் இருந்தனர். விஷமிகள் உள்ளே நுழைந்திருந்தால், அது கட்சி ஆட்களுக்கே தெரிந்து இருக்கும். ஜெனரேட்டர் அறையை பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஆனால், அங்கிருந்தவர்கள் தடுப்புகளையும் மீறி ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்து, அதை துண்டித்துள்ளனர். இதற்கு தவெக தான் பொறுப்பு. தொண்டர்கள் தண்ணீர் கேட்கும் போதே, அங்கே தொடர்ந்து கட்சி தலைவர் பேசி கொண்டிருந்தார். இதற்கான வீடியோவும் வெளியாகி இருந்தது. கட்சி தலைவர் பேசும்போதே அங்கே சிலருக்கு தண்ணீர் தேவைப்பட்டிருக்கிறது. ஒரு கூட்டம் நடத்தும் போது, அரசியல் கட்சி தலைவர் முன் சீட்டில் இருப்பார் அல்லது வாகனத்தின் மேலே இருந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து இருப்பார். ஆனால், இந்த நிகழ்வில் விஜய் முன் சீட்டில் இல்லை. வாகனத்திற்குள் சென்றுவிட்டார். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கிறது. முன் கூட்டிய வாகனத்தை நிறுத்தி பேசும்படி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதை அவர்கள் கேட்க மறுத்து, அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். தன்னை பார்க்க வேண்டிய மக்கள், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என நினைத்துள்ளனர். விஜய் பிரச்சார வாகனத்தில் இருந்தது 19 நிமிடம் தான். விஜய் பேச ஆரம்பித்த 6ஆவது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டு இருக்கிறது. 7.12 மணிக்கு நிறைய பேர் மயக்கமடைந்ததாக விஜய்க்கு சொல்லப்பட்டது. 14ஆவது நிமிஷத்தில் அங்கு பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாக, பாதுகாப்பில் இருந்தவர்கள் விஜய்யிடம் சொல்லியுள்ளனர். 19 நிமிடங்கள் மட்டுமே அவர் பேசியுள்ளார்.தமிழ்நாடு அரசின் மீது பழியை போட வேண்டும் என்ற நோக்கத்துடன் சிலர் தவறான தகவல்களை பரப்பினர். இவ்வாறு செந்தில்பாலாஜி பேசி உள்ளார்.