Also Watch
Read this
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம் அரங்கேறியுள்ளது. பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் கட்டிய மனைவியே கணவனை ஆண் நண்பருடன் இணைந்து கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.
தலையில்லாத சடலம்
ஜூன் 5ஆம் தேதி காலை வேளை, சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் கிடந்த நீல நிற சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர் ரயில் பயணிகள். ரயில் பயணிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சூட்கேசில் தலை, கை, கால்கள் இல்லாத ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் காவல்துறையினர். வழக்கமாக போலீஸ் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் யார் என்ற கேள்வியோடு விசாரணை தொடங்கும். பெரம்பூரில் கண்டெடுக்கப்பட்டது தலையில்லாத ஆண் சடலம் என்பதால் போலீசார் விசாரணையில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும் சடலம் இருந்த இடத்தில் சிசிடிவி பதிவாகாது என்பதால் என்ன செய்வது? என்று தெரியாமல் விழி பிதுங்கினர்.

தீவிர விசாரணை
உடனடியாக சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். குறிப்பாக சென்னையின் முக்கிய ஸ்டேசன்களில் இருந்து நீல நிற சூட்கேசுடன் யாராவது ரயிலில் ஏறி இருக்கிறார்களா? என சோதனையை முடுக்கி விட்டனர். அதே போன்று சென்னை முழுவதும் பதிவு செய்யப்பட்ட காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலை தயார் செய்தும் விசாரணையை முடுக்கிவிட்டது காவல்துறை. சுமார் 4 நாட்கள் நடந்த விசாரணையின் முடிவில் கொலை செய்யப்பட்டவர் சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அமீர் அலி என்பதை உறுதி செய்த காவல் துறையினர், அவரது மனைவி ரஹிமாவிடம் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையை தொடர்ந்து தானும் தனது நண்பரும் இணைந்து அமீர் அலியை கொலை செய்ததை ஒத்து கொண்டார். கொலைக்கு அவர் சொன்ன காரணங்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்.

அடிக்கடி தகராறு
வெளி மாநிலங்களில் இருந்து சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும் பணியை செய்து வந்துள்ளனர் அமீர் அலியும், அவரது மனைவி ரஹிமாவும். ரஹிமாவுக்கு அமீர் அலி 2ஆவது கணவர் என கூறப்படுகிறது. அமீர் அலி மேலும் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பெண்களுடனான தொடர்பு குறித்து மனைவி கேட்கும் போதெல்லாம், அவரது முதல் திருமண வாழ்க்கையை குறிப்பிட்டு அமீர் அலி தாக்கி வந்ததாகவும் தெரிகிறது.

கொடூர சம்பவம்
அமீர் அலியின் அட்டகாசம் எல்லை மீறி போனதை உணர்ந்த ரஹிமா, அவரை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டியுள்ளார். அதற்காக தனது நண்பர் அஸ்ராம் அலியிடம் உதவி கோரியுள்ளார். திட்டமிட்டபடி அமீர் அலியை மயக்கமடைய செய்த ரஹிமா, தனது நண்பரின் உதவியுடன் அவரை கொலை செய்துள்ளார். கொலைக்கு பின்னர் அதிலிருந்து தப்பிக்க நினைத்த அவர்கள் தலை, கை, கால்களை வெட்டி எடுத்து வீசி எறிந்துள்ளனர். சூட்கேசில் அமீர் அலியின் உடலை மட்டும் அடைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்து சென்று பெரம்பூர் ரயில் நிலையத்தில் விட்டு சென்றுள்ளனர். கொலை செய்த போது ஆத்திரத்தில் அவரது ஆணுறுப்பை வெட்டியதாகவும் காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார் ரஹிமா.
தலையில்லாத சடலம் என பரபரப்புடன் தொடங்கிய இந்த சம்பவம் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பர் கைது என்ற நடவடிக்கையோடு நீண்டு கொண்டே செல்கிறது. அமீர் அலியின் தலை மற்றும் கை கால்களை கண்டுபிடித்தால் மட்டுமே முடிவுக்கு வரும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தலை எங்கே?
தலையில் வாசனை திரவியத்தை தடவி, ரயிலில் எடுத்துச் சென்று செங்கல்பட்டு அருகேவுள்ள ஏரியில் யாருக்கும் தெரியாமல் வீசி சென்றதாக இருவரும் திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். மேலும், கை, கால்களை மட்டும் மனைவி ரஹிமா, தான் வசிக்கும் குடிசை மாற்று வாரியம் அருகே உள்ள கால்வாயில் வீசியதாகவும், சூட்கேசை வாடகை வாகனம் புக் செய்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு சென்றதாகவும் விசாரணையில் கூறியுள்ளனர். இந்நிலையில் இருவரும் மாற்றி மாற்றி இடத்தை காட்டியதால் தலையை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved