சென்னையில், போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சிக்கிய நிலையில், அடிக்கடி பார்ட்டிக்கு வந்து சென்ற 18 பேர் கொண்ட பட்டியலை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. சிம்புவின் நெருங்கிய வட்டத்தில் இருந்த ஷர்புதீனுக்கு பல திரை பிரபலங்களோடும் பழக்க வழக்கம் இருந்தது என்ற நிலையில், அடுத்து யார் சிக்குவார்கள்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. சிம்பு அமைதியாக இருந்தாலும், சிம்புவை சுற்றி ஏதாவது சர்ச்சைகள் இருந்து கொண்டே இருப்பது வழக்கம் தான். அப்படி தான் தற்போது போதைப் பொருள் வழக்கில் சிம்புவின் முன்னாள் உதவியாளர் சிக்கியிருக்கிறார். சென்னை, திருமங்கலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்து வந்த தியாகேஸ்வரன் என்பவரை கடந்த 19ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.ரகசிய தகவலின் பேரில் தியாகேஸ்வரனை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார், வழக்கம் போல விசாரணையை தொடங்கினர். அப்போது, தியாகேஸ்வரன் அளித்த தகவலின் பேரில் தேனாம்பேட்டையை சேர்ந்த 40 வயதான முகமது மஸ்தான் ஷர்புதீன் என்பவரை கைது செய்து, அவரது காரில் இருந்து 28 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஷர்புதினுக்கு பெரிய பின்னணியே இருப்பது தெரியவந்தது. தியாகேஸ்வரனிடம் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தி வந்த ஷர்புதீன், மற்றவர்களுக்கும் விற்று பணம் சம்பாதித்துவந்ததாக கூறப்படுகிறது.சிம்புவுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஷர்புதீன், சில ஆண்டுகள் உதவியாளராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு, சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தின் இணை தயாரிப்பாளராக ஷர்புதீன் இருந்ததாக சொல்லப்படுகிறது. சிம்புவுக்கு வலது கரம், இடது கரமாக இருந்த ஷர்புதீன், தனது வீட்டில் வைத்து சினிமா பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுப்பது வழக்கம் என சொல்லப்படுகிறது.அந்த பார்ட்டியில் வைத்து போதைப் பொருட்கள் சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், ஷர்புதீன் நடத்தும் போதை பார்ட்டிக்கு திரை பிரபலங்கள் பலரும் வந்து சென்றதும் தெரிய வந்துள்ளது.அந்த வகையில், ஷர்புதீன் வீட்டுக்கு அடிக்கடி பார்ட்டிக்கு வந்து செல்லும் 18 பேர் கொண்ட பட்டியலை தோண்டி எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த 18 பேர் கொண்ட பட்டியலில் சினிமா பிரபலங்கள், மாடலிங் துறையில் இருப்பவர்களும் அடங்குவர் எனவும் சொல்கிறது காவல்துறை வட்டாரம்.வார இறுதி நாட்களில் ஷர்புதீன் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பயன்படுத்தப்பட்ட பல வகை போதைப் பொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.இது ஒரு பக்கம் இருக்க, ஷர்புதீனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 28 லட்சம் ரூபாய் ஹரி என்பவருடையது என்பதும் தெரியவந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஹரி என்பவர், அதிமுகவுக்கு வியூகம் வகுத்து வரும் பிரமான்யா நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்ற நிலையில், ஹரியை அடுத்து அதே நிறுவனத்தில் பணிபுரியும் சாய் என்பவரையும் போலீஸ் கைது செய்தது.பின்னர், இருவரையும் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணைக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.இதனிடையே, போதைப் பொருள் வழக்கில் கைதான சிம்புவின் முன்னாள் உதவியாளர் ஷர்புதீனை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் போலீசார். டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.