இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயிற்றுப்பிழைப்புக்காக மீன் பிடிக்க சென்றது குற்றமா? மீன்களை பிடித்து மாடமாளிகையா கட்டப்போகிறோம்? என கண்ணீர் சிந்தியபடி கேள்வி எழுப்பிய பெண்கள், மத்திய மாநில அரசுகள் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 29 ஆம் தேதி 2 விசைப்படகில் 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். எல்லைதாண்டி மீன்பிடித்ததாககூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் மற்றும் ஏற்கெனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி தங்கச்சிமடம் பகுதியில் அனைத்து மீனவ சங்க கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.. குழந்தை குட்டிகளுடன், கண்ணீரும் கம்பலையுமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், மீன்பிடி தொழிலை தவிர தங்களுக்கு வேறு எந்த தொழிலுமே தெரியாது என்றும் கடலுக்குள் கொள்ளையா அடிக்கிறோம் வயிற்றுபிழைப்புக்காக மீன்கள் பிடித்தது ஒரு குற்றமா? என்றும் கேள்வி எழுப்பினர்..எல்லை தாண்டுவதாக தொல்லை கொடுக்கிறார்களே கடலுக்கு ஏதுய்யா எல்லை? என கண்ணீர் சிந்திய பெண்கள், மீன்களை பிடித்து மாடமாளிகையும், கூட கோபுரமுமா கட்டப்போகிறோம் என தங்கள் மனக்குமுறலை கொட்டினர்..தந்தையை காணாமல் கண்ணீர் சிந்தும் என் பேரனை பாருங்கள் என அழுத பெண், பிழைப்பு தேடி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற எங்களுக்கு இந்த கதியா? என கேள்வி எழுப்பினார்..