பிறந்த நாளில், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு தூங்கிய 6 வயது சிறுமி, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டை சேர்ந்த ஜவுளி வியாபாரியான மகேந்திரன் - பதுமேகலா தம்பதிக்கு, 6 வயதில் சஞ்சனா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மகேந்திரன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் ஈரோட்டில் உறவினர்கள் வீட்டில் இருந்த சஞ்சனா ஸ்ரீ, பிறந்த நாளையொட்டி சென்னைக்கு பெற்றோரை பார்க்க அழைத்து வரப்பட்டார். பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, பதுமேகலா தனது மகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பொரித்த மீன், சிக்கன் ஃபிரட் ரைஸை வாங்கி சிறுமிக்கு சாப்பிட கொடுத்துள்ளார். அதன்பின்னர் வீட்டுக்கு வந்த சஞ்சனா ஸ்ரீக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மருந்து கொடுத்து தூங்க வைத்துள்ளனர். அடுத்தநாள் எழுந்து பார்க்கும்போது சிறுமி வாய் மற்றும் மூக்கில் ரத்தம் வந்து இறந்துள்ளார். இதை பார்த்து பதறிய பெற்றோர் கதறி துடித்துள்ளனர். சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.