தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு வாரச்சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். தீபாவளிக்கு நாளை ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று சிறப்பு ஆட்டு சந்தை நடைபெற்றது. நல்லம்பள்ளி வாரச்சந்தைக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடுகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் சந்தையில் குவிந்தனர். ஆடுகள் எடைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆடுகளை வாங்க வியாபாரிகளும் விவசாயிகளும் வராததால் இந்த சிறப்பு சந்தைக்கு ஆடுகளின் வரத்து அதிகரித்து 3 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனையானது. இந்த புகழ்பெற்ற வாரச்சந்தை நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுப்பட்டில் உள்ளது. இந்நிலையில், ஒப்பந்ததாரர் அரசு நிர்ணயித்துள்ள ஆடு ஒன்றிற்கு 30 ரூபாய் கட்டணத்தை விட ஒரு ஆட்டிற்கு மூன்று மடங்கு உயர்த்தி ரூ. 120 வரை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.