பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தில், 700 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மக்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் 34.58 சதுர கிமீ் பரப்பளவு கொண்டது. இந்த நீர்த்தேக்கத்தில் 3,231 மில்லியன் கன அடி நீர் சேமித்து வைக்கும் அளவிற்கு 35 அடி உயரம் கொண்ட அணையாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் உள்ளது. இங்கு, அக்டோபர் மாதங்களில் 33 அடி உயரம் நீரை சேமித்து வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, நீர் கொள்ளளவு 35 அடி உயரமும் 3,231 மில்லியன் கன அடி ஆகவும் என, முழு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதியும் அக்டோபர் மாதத்தில் சேமித்து வைக்கப்படும் நீரின் அளவை காட்டிலும் 2 அடி அதிகமாக உள்ள காரணத்தினாலும், உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றி, சோழவரம் அணையில் சேர்த்து வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து இரண்டு மதகுகளின் வழியாக சுமார் 700 கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.